Saturday, September 19, 2015

இறைநிலை அறிவு :

இறைநிலை அறிவு
பகுதி : 1 - மனிதனும் இறைநிலையும்
மனித இன வாழ்வு மிகவும் மதிப்புடையதாகும். ஏனெனில் மனிதனால் தான் பிரபஞ்சத்தைப் பற்றியும், அதில் தோன்றி இயங்கிக் கொண்டிருக்கின்ற சடப்பொருள்கள் பற்றியும், உணர்ச்சி அனுபோகங்களாக உணரக் கூடிய பருவுடலைப் பற்றியும், சிந்தனையும் ஆராய்ச்சியும் செய்ய முடியும். மேலும் காந்த ஆற்றலின் சிறப்பியக்கத் தத்துவமாகிய ஆன்மாவெனும் கருமையத்தைப் பற்றியும் உணர்ந்து கொள்ள மனிதனால் மட்டுமே முடிகிறது.
மனிதனில் அடங்கியுள்ள கருமையத்தில்தான் பேரியக்க மண்டல இரகசியங்கள் அனைத்தும் அலை வடிவில் சுருங்கியுள்ளன. அவை எப்போதும் அழியாத வளமுடையனவாகவும், வியப்புக்குரியனவாகவும், புலன்களுக்கு எட்டாத மறைபொருட்களாகவும் உள்ளன. இறைநிலையென்னும் மூலப்பொருள்தான் பிரபஞ்சமாக மலர்ந்து உள்ளது. தத்துவஞான ஆராய்ச்சியாளர்களும், விஞ்ஞான ஆராய்ச்சியாளர்களும் இறைநிலையென்ற பேராற்றலை நோக்கியே அனைத்து வழியிலும் தங்கள் தங்கள் ஆராய்ச்சிகளைத் தொடர்ந்து செய்து கொண்டிருக்கிறார்கள்.
மனித இனம் தோன்றி எவ்வளவு காலம் சென்று விட்டதோ, அக்கால முழுமையும் இன்று வரையிலும் இறைநிலையைப் பற்றிய ஆராய்ச்சி நடந்து கொண்டுதான் வருகின்றது. எனினும் தத்துவம், விஞ்ஞானம் எனும் இரண்டு துறைகளிலும் இன்னமும் எவரும் இறைநிலை விளக்கத்தை முழுமையாக ஐயமின்றித் தெரிந்து கொள்ளவில்லை. அதனால் அவர்களால் பிறருக்குத் தெரிவிக்கவும் முடிய வில்லை. இந்த வழுக்கல் ஏன்? இதை அறிந்து நாம் தெளிவு பெறவும், மற்றுமுள்ள, வயதாலும் சிந்தனையாற்றலாலும் இறைநிலையை உணரத் தகுதியுடைய எல்லோரும் உணர்ந்து கொள்ளச் செய்யவும் முயல்வோம். இந்த அருள் தொண்டில் வெற்றி பெறுவோம்.
இறைநிலையிலிருந்து பிரபஞ்சம் தோன்றியது என்ற கருத்தே எல்லா வழுக்கல்களுக்கும் காரணம். உண்மையில் இறைநிலையே பிரபஞ்சமாக தன்மாற்றம் (Transformation) அடைந்து இயங்கிக் கொண்டிருக்கிறது. இறைநிலை வேறாகவும், பிரபஞ்சப் பொருட்கள் வேறாகவும் இருக்கின்றன என்பதே தவறான கருத்து ஆகும். எந்த ஒரு தோற்றமும், நிகழ்ச்சியும் இறையாற்றலின் பகுதியே ஆகும்.
முதல் விளக்கமாக இறைநிலையை சில அடையாளங்களோடு தெளிவாகப் புரிந்து கொள்ள வேண்டும். சாதாரணமாக ஐம்புலனறிவோடு இயங்குகின்ற மனிதர்கட்கு இறைநிலையைப் பற்றிய உண்மைகளும், விளக்கங்களும் எளிதில் பிடிபடா. என்றாலும், ஆறாவது அறிவு நிலையில் முதிர்ச்சியடைந்தவர்கள் பயிற்சியினால் இறைநிலையோடு கலந்து அதன் உண்மை நிலைகளை உணர முடியும்; உணர்ந்தும் உள்ளார்கள். அந்த அனுபவங்களை அடையாளங்களாகக் காட்டி மற்றுமுள்ள மனித குலத்திற்கு அந்த அருட்பேராற்றலைப் பற்றி விளக்குவது எளிதேயாகும்.
சாதாரனமாக மனிதருக்குள் அறிவு ஆராய்ச்சி நிலையில் சில வழுக்கல்கள் ஏற்படுகின்றன. இதற்குக் காரணம் அவர்களுக்கு ஆறாவது அறிவு இயங்கவில்லை என்றோ, குறைவாக உள்ளது என்றோ கருத்து அன்று. அறிவின் கூர்மையும், நீடித்த சிந்தனையும் மறைபொருட்களை ஆராய்வதற்கு மிகவும் அவசியம். எந்தப் பொருளைப் பற்றி உணர வேண்டுமானாலும் அந்தப் பொருளைவிட நுண்ணிய நிலையில் அறிவு இயங்கப் பழகிக் கொள்ள வேண்டும். இதற்கான முறையான உளப்பயிற்சி அகத்தவம் ஆகும்.
வேதாத்திரி

மெளன காலம் :

மெளன காலம்

மெளனத்தில் பழகிப் பழகித் தான் எண்ணங்களை வெற்றி கொள்ள வேண்டும். மெளனத்தில் கிடைக்கக் கூடிய நல்ல எண்ணங்கள், முன் செய்த நல்ல செயல்களின் பதிவுகள் எல்லாவற்றையும் குறிப்பெடுத்துக் கொண்டு அவற்றைச் செயல்படுத்தி விட்டோமானால், வாழ்க்கையில் மேம்பாடு வரும்.

இவைகளை எல்லாம் அனுபவத்தில் நீங்கள் பார்க்கலாம். நாம் பேசிக் கொண்டிருக்கும்போது, உணர்ச்சிவயப்பட்ட நிலையில் இருக்கிறோம். நமக்கு யார் யாருடைய கருத்துக்கள் வான் காந்தத்திலிருந்து வரும் என்றால், உணர்ச்சிவயப்பட்ட நிலையில் உள்ளவர்களின் கருத்துத் தான் வரும். அவை நமது மூளையோடு சேர்ந்து நமது எண்ணங்களாக வரும்.

ஆனால், மெளனத்தில் பேரமைதி நிலைக்கு வந்தால், அமைதியாக இருந்து ஆராய்ச்சி செய்து, இறைநிலையை உணர்ந்து, அதோடு தொடர்பு கொண்டால், அந்த நிலையை உணர்ந்த பெரும் மகான்கள், அவர்களுடைய ஆற்றல்கள், எண்ணங்கள் எல்லாம் நம்முடைய எண்ணங்களாக வரும். அதை எல்லாம் அனுபவித்துப் பார்க்கலாம். அனுபவித்துப் பார்ப்பதற்கு ஏற்ற காலம் தான் மெளன காலம்.

எவ்வளவு காலம் மெளனம் மேற்கொள்ளலாம்?

நீங்கள் ஒரு நாள் மெளனம் இருக்கலாம். இரண்டு நாளும் இருக்கலாம். ஆனால், அந்த மெளன காலத்தில் கிடைத்த பயன்களை நினைவில் பதிய வைத்துக் கொள்ளுங்கள். வாழ்க்கையில் அவற்றைப் பயன்படுத்திக் கொள்ளவும் வேண்டும்.

போகப்போக ஒரு மணி நேரம் மெளனம் இருந்தால் கூடப் போதும். ஆனாலும், அந்த ஒரு மணி நேரமும் வெற்றி அளிப்பதாக இருக்கும். இங்கேயும் அங்கேயும் மனதை ஓடவிடாது வைத்து இருக்க முடியும்.

அப்படி இருந்து பழகிவிட்டோம் என்று வைத்துக் கொள்ளுங்கள். எந்தச் செயல் செய்தாலும் பதிவாகி அந்தந்தப் பதிவுகள் அவ்வப்போது எண்ணங்களாக வருகின்றன அல்லவா? அதேபோல மெளன காலத்தில் நீங்கள் இறைநிலையில் இருந்து ஏற்படுத்திக் கொண்ட மெளனப் பதிவும் சாதாரண காலங்களில் கூட மேலே வந்து அவ்வப்போது அமைதி நிலைக்கு உங்கள் மனதை அழைத்துச் செல்லும்.

-- அருள்தந்தை யோகிராஜ் வேதாத்திரி மகரிஷி.

சாந்தியோகம்:



சாந்தியோகம்:..

இந்த மையம் முதுகந்தண்டின்
(spinal cord) அடிப்பகுதியாகும்.
ஆசனவாய்க்கு மேலே உள்ள பால்
உணர்வுச்சுரப்பியை (sexual gland)
இது குறிக்கும்..எனவே, மூலாதாரத்தில்
நின்று தவம் இயற்றும்போது,
அதாவது அந்த இடத்தில் அதாவது
உடலின் உள்ளே(முன்புறமோ, பின்புறமோ)
நினைவை செலுத்தி தவம் இயற்றவேண்டும்.


இதற்கு சாந்தியோகம் என்று பெயர்.
முதுகந்தண்டின் அடிப்பகுதியில்,
ஆசன வாய்க்கு ஓர் அங்குலம் உயரே
மனதை குவிக்க வேண்டும். அப்போது
சாந்தியோகம் எளிதில் பிடிபடும்.
இது மிகவும் முக்கியமானது.
.

வேக வாகனத்தை இயக்க கற்றுக்
கொடுக்கும்போது ஆக்ஸிலரேட்டரை
அழுத்தக் கற்றுத்தருபவர், கூடவே
பிரேக்கையும் காட்டிக்கொடுத்து,
அதன் மதிப்பையும் உபயோகத்தையும்
சொல்லித்தருவார். அதுபோல்,
உயிராற்றலை ஆக்கினைக்கும்,
அதற்கும் மேலேயும் தூக்கி,
நிறுத்திப்பழகுதல்தான் தன்னிலை
விளக்கத்தையும் ஆன்மீக உயர்வையும்
தரும், என்றாலும், தவக்கனல் பல
காரணங்களால் கட்டு மீறுகின்றபோதும்,
வேறு சில சூழ்நிலைகளிலும் உயிராற்றலை
அதனது பழைய இடத்திலேயே
நிறுத்தியாக வேண்டும். இதுவே சாந்தியோகம்.
.

இந்த சாந்தியோகம் என்னும்
மூலாதாரத் தவத்தை ஆரம்ப காலத்தினர்
அறிந்திருக்கவில்லை. அதனால்
முற்காலத்தில் தவமியற்றுதல்
என்பது உயிருக்கே ஆபத்தான
காரியமாக இருந்திருக்கிறது. பிரமை,
பைத்தியம் போன்ற கொடிய
வியாதிகளும் நேர்ந்திருக்கின்றது.

ஆனால் இப்போது அந்த பயம்
சற்றும் கிடையாது.யோக சாதனையின்
அதீத த்தின் (Exess) காரணமாகவோ,
உணவின் காரணமாகவோ, ஆராய்ச்சியின்
காரணமாகவோ அல்லது கோள்களின்
நிலை காரணமாகவோ, தவக் கனல்
மிகுந்தால் , அதை உடனடியாக
உணர்ந்து தணித்துக்கொள்ளவும்,
அந்த தவக்கனலின் அதீதத்தை(Exess)
உடல் நலனுக்கும், உள்ளத்தின் நலனுக்கும் பயனாக்கிக்கொள்ளவும் சாந்தியோகம் உதவுகிறது
.

.
“தவவேகம் உடல்பலத்தை மீறும்போது
தணித்திடவும் வழியுண்டாம், அதைக்காணாமல்,

சிவநிலையை அடைவதற்குத் தவமிருந்து,
சித்தியடை யாமுன்னம் கனல் மிகுந்து

சவநிலையை அடைந்தார் முன்னாளில் பல்லோர்
சற்றுமிப்போ தந்தபயம் இங்கே இல்லை;

நவயுகத்திற் கேற்றபடி, வாழ்க்கை ஊடே
“நான்” என்னும் நிலையறியும் மார்க்கம் ஈதாம்.”
.

.
மூலாதாரத்திலிருந்து உணர்வு
மெலெழுப்பப் பெற்ற உணர்வாளர்களுடைய
உயிராற்றலானது சில சூழ்நிலைகளுக்கு
உள்ளாகும்போது, சிதைவையும்,
இழப்பையும்(Damage) ஏற்கவேண்டிவரும்.
அவை; மாதவிலக்கில் இருக்கும்
பெண்களின் அருகாமை, நாயின்
அருகாமை, பன்றியின் அருகாமை
மற்றும் பிணத்தின் அறுகாமை.
.

தவிர்க்க முடியாத காரணத்தால்
இந்தச்சூழ்நிலைகள் ஏதேனும்
ஒன்றில் இருந்தே ஆகவேண்டும்
என்றநிலை ஏற்பட்டால், அப்போது
உடனே சாந்தியோகத்தில் இறங்கிவிட
வேண்டும்., உணர்வை ஆக்கினையில்
வைக்காது மூலாதாரத்திற்கு
இறக்கிவிடவேண்டும். அப்போது
நாம் எந்த இழப்புக்கும் உள்ளாகமாட்டோம்.
மாதவிலக்கில் இருக்கும் பெண்டிர்
சமைத்த உணவை உண்ண வேண்டிய
தவிர்க்க முடியாத கட்டாயம் நேர்ந்தால்,
அப்போது கூட , இறங்குபடியில்
இருந்துகொண்டுதான் உண்ணவேண்டும்.
அப்போதுதான் உயிராற்றலின்
இழப்பிலிருந்து தப்பலாம்.
.

.
மேலே சென்ற்விட்ட நாம் கீழே
இறங்கிநின்று தவம் இயற்றுவதால்,
சாந்தியோகத்திற்கு இறங்குபடி தவம்
என்றும் ஒரு பெயர் உண்டு.தவக்கனலை
இறக்கிச் சாந்தி தருவதால்
சாந்தியோகம் என்று பெயர்.
.

நினைத்தவுடன் சட்டென்று
மூலாதாரத்திற்கு இறங்கிவிடும் திறன்
கிடைக்க வேண்டும் என்பதற்காகத்தான்
இந்த குண்டலினி யோகப் பயிற்சியின்
ஆரம்ப காலத்தில் 4லிலிருந்து 7 நாட்கள்
சாந்தியோகத்திலேயே இருக்கவேண்டும்.
.

தவிர ஆரம்ப பயிற்சியாளர்கள், ஒவ்வொரு
வேளை சாப்பாட்டிற்கு பிறகும் மூன்று
நிமிடம் இறங்குபடி கவனிக்கவெண்டும்.
இதற்கும் உட்கார்ந்து தவம் செய்ய
வேண்டுமென்பதில்லை. சாப்பிட்டு
முடித்தபின் அடுத்த அடுத்த காரியங்களை ப்
பார்த்துக்கொண்டே , நினைவை மட்டும்
மூலாதாரத்தில் வைத்திருக்கவேண்டும்.
.

.
ஆரம்ப பயிற்சியாளரும் சரி, முதிர்ந்த
பயிற்சியாளரும் சரி, ஆரத்தில் இரண்டுவேளை
(வெள்ளி காலை, மாலை) கட்டாயம்
சாந்தியோகம் மட்டுமே பயிலவேண்டும்.
அதேபோல மாதாந்திர உலக அமைதி
தற்சோதனை, மௌன நோன்பு அன்று
படுக்கப் போகும் முன் இயற்றப்படும்
கடைசிவேளைத்தவம் முழுக்க்ழ் முழுக்க இறங்குபடித்தவமாகவே இயற்றவேண்டும்.
.

வாழ்த்தும் கூட இறங்குபடியில்
நின்றே கூறவேண்டும். பஞ்சபூத
தத்துவத்தில் மண் ஆகிய பிருதிவிக்கு
உரிய ஸ்தானம் மூலாதாரம். இங்கு
நின்று தவம் ஆற்றுவதால் பூகம்ப
ஆராய்ச்சி பற்றிய அறிவு விருத்தியாகும்.
.

.
ஒரு குண்டலினி யோகி தவமியற்றி
சேமித்து வைத்துள்ள தவச்சக்தியின்
மிகுதியானது சாந்தியோகத்தின் பயனாக
உயல்சக்தியாக மாறுகிறது. அது உடல்
நலனுக்கும் நோய் எதிர்ப்புக்கும் பயன்படும்
. உடல்வலி, ஜுரம், அஜீரணம் போன்ற
சாதாரண நோய்கள் சாந்தியோகத்தால்
நீங்கும். மலச்சிக்கல் விலகும். உடலில்
உயிரின் இயக்கம் சீராகும்.
.

.
ஒரு நுட்பத்தை கவனியுங்கள் :
முன்னர் மூலாதாரத்தில் குண்டலினி
சக்தி இருப்பதாக இருந்ததற்கும்.
இப்போது சாந்தியோகத்தில் நாம்
அதே சக்தியை மூலாதாரத்தில்
தேக்கி தவம் இயற்றுதலுக்கும்
நிறைய வித்தியாசம் இருக்கின்றன.
அவற்றை ஆராய்வோம்
.

.
முன்னர் மயக்க நிலை, இப்போது
விழிப்புநிலை, மூலாதாரத்தில்
நின்றாலும் சாந்தியோகத்தின்போது
மனம் விழிப்பில்தான் இருக்கின்றது.
எனவெ நத்தின் சக்தி குறைந்துவிடுவது
இல்லை.ஆகவே சாந்தியோகத்தின்போது
வாழ்த்துக்கூறுதலும் பொருத்தமானதுதான்.
.

முன்னர் மூலாதாரத்தில் உயிராற்றல்
இருந்தது தெரியாது. இப்போது சாந்தியோகத்தில்
அது இருப்பது தெரிகிறது.அதன் அழுத்தமும்,
அசைவும் மனதிற்கு புலப்படுகின்றன.
அவற்றை கவனித்தன் மனதிற்கு
ஓர்மைநிலைப் பயிற்சியாகவும் (concentration)
அமைகிறது.
.

.
சாந்தியோகத்தின் காரணமாக,
தேவைக்கேற்ப உடல் சக்தியை
மனோசக்தியாகவும், மனோசக்தியை
உடல்சக்தியாகவும் மாற்றி மாற்றி
பயன்படுத்தி துய்க்கிறோம். எனவே
இதன் மதிப்பையும், உயர்வையும்
போற்றி உரியவாறு இத்தவத்தை
பயின்றுவரவேண்டும்.
.

.
வாழ்க வளமுடன்
.
-வேதாத்திரி மகரிஷி
(மனவளக்கலை பாகம்-1 என்றநூலிலிருந்து)

Tuesday, September 1, 2015

ஆசைகளை முறைப்படுத்திக் கொள்வோம் :

ஆசைகளை முறைப்படுத்திக் கொள்வோம் :

நம்முடைய மனம் சில நிமிடங்களுக்குள்,

நூற்றுக்கணக்கான ஆசைகளை நினைக்கவல்லது.


ஆனால், அவற்றில் ஒரு சில ஆசைகளை, நம்முடைய உடம்பால் ஏற்றுச் சமாளிக்க முடியாது.

சில விருப்பங்களை ஈடேறச் செய்வதற்குப் போதுமான வாய்ப்பும் நமக்குக் கிடைப்பதில்லை.

ஆசைகளை மேலும் மேலும் வளர்த்துக் கொண்டு அவை நிறைவேறாமல் போகும்போது நாம் ஏமாற்றத்தில் ஆழ்ந்து விடுவோம்.

இப்படி மனதைக் கீழ்நிலைக்குச் செல்லாமல் பக்குவப்படுத்த நம்மை தயார் செய்ய வேண்டும்.

ஆசைகளைக் குறைத்துக் கொள்வது அல்லது கட்டுப்படுத்திக் கொள்வது மட்டுமே இதற்கு முதல்படியாக அமையும்.

முதலில் நாம் எண்ணும் ஆசைகள் நம் நிலைக்கு பொருத்தமானவையாகவும், மனஅமைதியைக் கெடுக்காத வகையிலும் அமைவது அவசியம்.

இரண்டாவதாக நம் ஆசைகள் பிறரைப் பாதிக்காத வகையில் அமைய வேண்டும்.

மூன்றாவதாக இயற்கை நியதிகளை ஒட்டியதாக ஆசை இருத்தல் வேண்டும்.

இயற்கையின் ஒழுங்குக்கு மீறிய எண்ணங்கள் நிச்சயமாக நம்மைத் தண்டித்து விடும்.

இப்படி ஆசைகளை முறைப்படுத்தி விட்டால் நாம் நலமுடன் வாழலாம்.

பரலோகத்திலும் நன்மைகளைப் பெறலாம்.

--- அருள்தந்தை

வாழ்க வளமுடன்

வெற்றி பெற வழி :

வெற்றி பெற வழி :

தனக்கும் , பிறருக்கும் தற்காலத்திலும், பிற்காலத்திலும் துன்பம் தராத செயல்கள் செய்ய வேண்டும். கூடுமான வரையில் பிறருக்கு உதவ வேண்டும். இதுவே வேதங்கள் மற்றும் புராணங்களின் சாரம்.

ஏதோ சந்தர்ப்பவசத்தால் பிறருக்குத் துன்பம் வந்து விடுகிறது . அவர்களால் தீர்த்துக் கொள்ள முடியவில்லை . அப்போது இயன்ற வரையில் நான் அப்படிப்பட்டவர்களின் துன்பத்தைத் தீர்க்கிற போதும், அதனால் நமக்குத் துன்பம் வந்து விடாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.


ஏனென்றால் நமக்கே துன்பம் வந்து , நாம் பிறரிடம் போய் அதைத் தீர்க்கும் படி கெஞ்சும் நிலை வந்துவிடக் கூடாது அல்லவா?

அந்த அளவில் விழிப்பாக இருந்து கொள்ள வேண்டும். தனக்கும் துன்பமில்லாது . பிறருக்கும் துன்பம் விளைவிக்காத வாழ்க்கையில், நமக்கு என்னென்ன தேவையோ, அவை கிடைக்கும் சூழ்நிலை தானாகவே அமையும். இதற்காக கெஞ்சிக் கேட்டு ஒன்றும் நாம் பெற வேண்டியதே இல்லை.

எந்த இடத்திலே , எந்த காலத்திலேயே, எந்த நோக்கத்தோடு , எந்த செயலை நீ எவ்வளவு திறமையாக செய்கிறாயோ அதற்குத் தகுந்தவாறே விளையும் வரும். வெற்றியும் வரும் .

---அருள்தந்தை

வாழ்க வளமுடன்

Tuesday, August 18, 2015

பேரறிவு :



இருப்புநிலை, சூன்யம், ஒன்றுமில்லாதது என்று பலரும் எண்ணுகின்றனர். இது தவறானது. இருப்புநிலை எல்லாவற்றையும் தன்னுள் பெற்றுள்ளது. அனைத்து பொருளும் இங்கிருந்து தான் ஆரம்பிக்கின்றது. இதனுள் இயங்குகின்றது. இருப்புநிலையை கடல் என்று நாம் எண்ணினால் பிரபஞ்சத்தில் உள்ள மிகச்சிறிய பொருள்களிலிருந்து மிகப் பெரிய பொருள் வரை அதன் இயக்கங்கள், சக்திகள் அனைத்தும் கடலில் தோன்றுகின்ற அலைகளாகும். அலைகள் கடலில் தோன்றி, கடலின்மேல் அசைந்து, கடலில் முடிவடைகின்றது. அதே போன்று மிகச்சிறிய பொருளிலிருந்து மிகப் பெரிய சூரியன் வரை உள்ள அனைத்து பொருள்களும், உயிர்வாழும் ஜீவன்களும் இருப்புநிலையிலிருந்து (Static State) தோன்றி, அதனுள் இயங்கி, அதனுள்ளே முடிவடைகின்றது.

நீக்கமற நிறைந்துள்ள பூரணத்தில் பிரபஞ்சத்தில் உள்ள அனைத்தும் இருப்பு நிலையில் மிதக்கின்றன. அசைகின்றன. தண்ணீரில் அதன் நுரை மிக நின்றாகத் தெரியும். நீரில் நுரை மிதப்பதைப் போன்று அனைத்துப் பொருள்களும் பூரணத்தில் மிதந்து கொண்டு உள்ளன. எண்ணிப் பாருங்கள். ஒரு பொருள், அதன்மேல் மற்றொரு பொருள் இதில் எது சக்திவாய்ந்தது. அசைகின்ற ஒவ்வொரு பொருளையும் தன்னிடம் பிடித்துக் கொண்டிருப்பது இருப்புநிலை. பிரபஞ்சம் முழுதும் பூரணத்தில் அடங்கியுள்ளது. பூரணத்தில் மிதந்து கொண்டும் இயங்கிக் கொண்டும் இருக்கிறது. சுற்றிலும் சூழ்ந்துள்ள இருப்புநிலையின் அழுத்தத்தால் பிரபஞ்சத்தில் உள்ள ஒவ்வொரு துகளும் தற்சுழற்சி வேகத்துடன் இயங்கிக் கொண்டுள்ளது. பொருள்களின் தன்மைக்கேற்ப பிரபஞ்சம் முழுதும் வெவ்வேறு வேகத்துடன் அவைகள் இயங்கிக் கொண்டுள்ளது. இருப்புநிலையே எல்லாம் வல்லது, அதுவே ஆதிநிலை.
- தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி.
வாழ்க வையகம் வாழ்க வளமுடன்

ஆசையின் மயக்கம் :

தேவையைக் காரணமாகக் கொண்டு எழுந்த ஆசை தேவை நிறைவோடு நின்றுவிட வேண்டும். பசி தாகம் முதலிய இயற்கைத் துன்பத்தைப் போக்கிக் கொள்ள எழுந்த ஆசை துன்பத்தைப் போக்குவதோடு நின்றாக வேண்டும். உயிராற்றல் செலவைச் சரி செய்ய எழுந்த ஆசை அப்படிச் சரி செய்வதோடு நின்றாக வேண்டும். ஆனால் பொதுவாக அப்படி நிற்பதில்லை.
.
ஆசையின் மயக்க நிலை :
தேவை நிறைவின் போது ஏற்பட்ட திருப்தியின் மீது அல்லது இன்பத்தின் மீது உயிர் மயங்கிவிடுகிறது. எந்தக் காரியம் இன்பத்தைத் தந்ததோ, அந்தக் காரியத்தைத் தேவையில்லாமலே செய்ய விழைகிறது. அதாவது உண்மையான தேவை இல்லாமலேயே ஆசை எழுகிறது. எழுகிற துன்பத்தைத் தீர்க்கும் வகையில் ஆசை தோன்றியது போக, இன்பத்தைச் செயற்கையாகத் தேடும் முயற்சியிலே இப்போது ஆசை எழுகிறது. இந்த ஆசையைத் தான் கட்டுப்படுத்த வேண்டும். எழாமலேயே காக்கவும் வேண்டும்.
.
உயிராற்றல் குறைவை நிறைவு செய்வதற்காக அல்லாமல், இயற்கைத் துன்பத்தைத் தீர்ப்பதற்காக அல்லாமல்,உண்மையான உயர்வான தேவையின் காரணமாக அல்லாமல் ஏற்படும் ஆசைகளெல்லாம் அறிவின் மயக்கத்தால் தோன்றுவன. அவை துன்பத்தைத்தான் தரும்.
.
இன்னொன்று, தகுந்த காரணத்தாலேயே ஏற்பட்ட இச்சைகளானாலும், அவ்வாசைகளை நிறைவு செய்யும் முயற்சியில் தனக்கோ பிறர்க்கோ துன்பம் தோன்றுமானால், அவ்வாசைகளும் தடுக்கப்பட வேண்டியவையே. மேலும், நிறைவேறிய பின்னர் தீய விளைவுகளைத் தரக்கூடிய இச்சைகளையும் கட்டுப்படுத்தித் தான் ஆக வேண்டும்.
.
வாழ்க வையகம் வாழ்க வளமுடன்.
- தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி

மனவளக்கலை ஒரு பெட்டகம் :

தான் உயரவும், பிறரையும் உயர்த்தவும் ஏற்ற பயிற்சியும், தொண்டும், இரண்டும் மனவளக்கலையில் அடங்கியுள்ளன.
.
இரண்டு வேலையும் ஆக்கினை, துரியம், சாந்தியோகம் தவறாமல் தவமியற்றி வாருங்கள். மன அமைதி அறிவுக்கூர்மை, அறிவின் ஓர்மை, மன உறுதி இவை உண்டாகும்.
.
தற்சோதனையில் எண்ணங்களை ஆராயுங்கள். விழிப்பு நிலையில் அறிவு செயல்படும். நலம், தீது உணர் ஆற்றல் உண்டாகும். வேண்டாப் பதிவுகளை - வினைபதிவுகளை மாற்றி விடலாம்.
.
ஆசைச் சீரமைப்பு பயிற்சி செய்யுங்கள். உடல் நலம்; மனவளம், பொருள் வளம், நற்புகழ், நிறைவு இவை பெருகும். அமைதியுண்டாம்.
.
சினம் தவிர்ப்பு பழகுங்கள். குடும்பம், நண்பர்கள், தொழில் செய்யுமிடத்திலுள்ளோர், உற்றார் உறவினர் இவர்களிடம் உங்கள் அன்பு, நட்பு, இவைபெருகும். இனிமையும் மகிழ்ச்சியும் உண்டாகும்.
.
கவலை ஒழிப்பு பழகுங்கள். அச்சமின்மை, மெய்யுணர்வு, உடல் நலம், மனநிறைவு இவையுண்டாகும்.
.
நான் யார் என்ற ஆராய்ச்சியில் தெளிவு பெறுங்கள். பேரியக்க மண்டலம், தோற்றம், இயக்கம், விளைவு அணைத்து மறை பொருட்களும், மனம், உயிர், மெய்ப் பொருள் உணர்வு உண்டாம்.
.
இவ்வளவு பயிற்சியும் பழக்கமும் இணைந்த ஒரு வாழ்க்கை நலக்கல்வியே "மனவளக் கலை" யாகும். இக்கலையை எளிய முறையில் கற்கும் பேறு பெற்றிருக்கீர்கள். இக்கலையின் மாண்புணர்ந்து பழகி நலம் பெற்று மனதில் நிறைவு பெறுங்கள். மனநிறைவைப் பெற்றுவிட்டால் அறிவு மேலும் உயர்ந்து சிறந்து விளங்கும். பிறவியின் நோக்கம் வெற்றி பெறும். இத்தகைய உயர் வாழ்வுக்கு ஏற்ற ஒரு பெட்டகம் மனவளக்கலை.
புத்தாண்டு வாழ்த்துக்கள்.
.
- தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி.
வாழ்க வையகம் வாழ்க வளமுடன்.

Tuesday, July 7, 2015

அத்வைதம் த்வைதம் :



அத்வைதம் த்வைதம் :
--------------------------------


.
நீங்கள் கடையில் தேங்காய் வாங்குகிறீர்கள்; தேங்காய்க்குள் தண்ணீர் இருக்கிறது. நீங்கள் ஒரு எலுமிச்சம் பழம் வாங்குகிறீர்கள்; அதற்குள்ளும் நீர் இருக்கிறது, அதை ஜூஸ் (Juice) என்கிறோம். இதேபோல எந்த இடத்தில் நீர் இருந்தாலும் அது நமக்குத் தேவைப்படுவதாகவே உள்ளது. சில இலைகளில் கூட நீர் இருக்கிறது; கசக்கிப் பிழிந்து அதை உபயோகப்படுத்துகிறோம். ஒவ்வொன்றிலிருந்து கிடைக்கும் நீருக்கும், தனித்தனிப் பெயர்களைக் கொடுத்து அவற்றை உபயோகப்படுத்துகிறோம்.

.
இதே நீரின் மூலம் என்ன? தேங்காய்க்குள் எப்படி தண்ணீர் வந்தது? நிலத்திலிருந்து தானே? அப்படியானால் நிலத்திற்கு, பூமிக்கு எப்படி தண்ணீர் வந்தது? மழையிலிருந்து வந்தது, மழை எப்படி நீரைப் பெற்றது. கடலிலிருந்து, கடல்நீர் ஆவியாகி மேகமாக மாறுவதால் வந்தது.

.
இதே தத்துவம் தான் எலுமிச்சம் பழத்திலுள்ள நீருக்கும், இலைகளில் உள்ள நீருக்கும் ஏற்றது. தேங்காய்க்குள்ளும் எலுமிச்சம் பழத்திற்குள்ளும், இலைகளுக்குள்ளும், எல்லாவற்றிலும் கடல் நீரைத் தானே காண்கிறோம்? இதுதான் அத்வைதம்.

.
பரிணாம வளர்ச்சியில் ஏற்படும் மாற்றங்களையெல்லாம் மறந்து விடாமல் மூலத்தைப் பார்க்க வேண்டும்.

.
வாழ்க வையகம் வாழ்க வளமுடன்.

- தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி.

.
* * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * *
.
"மனிதனே நீயார்? சொல்!
மனமென்பதெது ? கூறு!
மயங்கினாயேல் நீ மதிக்கும்
மற்றவெலாம் சரியாகா! "

.
கடவுள் :

"உருவங்கள் கோடான கோடியாய், அவை
யுள்ளும் புறமும் அரூபமாய்,
ஊடுருவி நிறைந்தியங்கும் ஒருசக்தி,
உயிராகும், இயற்கையாகும் கடவுளாகும்."

.
அத்வைதம், துவைதம் :
--------------------------------------

"கற்கண்டு என்ற ஒரு வார்த்தை சொன்னால்
கரும்பு ரசப்பக்குவத்தின் சரித்திரமாகும்
கற்கண்டைக் கரும்பு ரசம் என்றால் அஃது
கருத்துக்கு அத்துவித தத்துவம்போல்
கற்கண்டு கரும்புரசம் வேறு வேறாய்க்
காட்டுவது துவித நிலை விளக்கம் ஒக்கும்
கற்கண்டு கரும்புரசம் இரண்டும் போலாம்
கடவுளும் மற்றனைத்துருவும் கருத்துணர்ந்தால்.

.
- தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி

மனதின் தரத்தை உயர்த்தும் எளிமைப்படுத்தப்பட்ட குண்டலினி யோகம் (Simplified Kundalini Yoga)



மனதின் தரத்தை உயர்த்தும் எளிமைப்படுத்தப்பட்ட
------------------------------------------------------------------------
குண்டலினி யோகம் (Simplified Kundalini Yoga)
-------------------------------------------------------------
.
"உலக உயிர்கள் அனைத்திலும் மனிதன் மிகவும் உயர்ந்தவன். இயற்கையின் பரிணாமச் சிறப்புகள் அனைத்தும் அவனிடம் ஒருங்கிணைந்துள்ளன. மனிதனிடம் இவ்வளவு பேராற்றல் இருந்தும் அவன் தன் ஆற்றலின் பெருமையை, தன் ஆற்றலின் முழுமையை மறந்திருக்கிறான். அதனால் அப்பேராற்றல் அவனிடம் இயக்கம் பெறாமல் பலம் குன்றியிருக்கின்றது. இதை மூட நிலை எனலாம். 'மூடம்' என்றால் 'மறைவு' என்று பொருள். அறிவு இருந்தும் அது அவனிடம் இயக்கம் பெறாமல் இருப்பவன். அறிவு இருப்பது வெளிப்படாமல், அதாவது மறைவாக இருக்கும் நிலையில் உள்ளது. இயக்கம் பெறாமல் தடைப்பட்டிருக்கும் நிலையாகும். இந்த நிலை மாற வேண்டும். இந்த நிலை மாற வேண்டுமானால் தகுந்த மனப் பயிற்சியின்றி முடியவே முடியாது.
.
ஏனெனில், தவறிழைப்பதும் மனம்; இனித் தவறு செய்துவிடக்கூடாது என்று தீர்மானிப்பதும் அதே மனம்தான். தவறு செய்யாத வழியைத் தேர்ந்து ஒழுகவேண்டியதும் மனமே. மனதை பழைய நிலையிலேயே வைத்துக்கொண்டு புதிய வழியில் செல்வது எப்படி முடியும் ? முடியாது; மனம் தான் தனக்குத்தானே வைத்தியம் செய்து கொள்ள வேண்டும். அதற்கு மெய்ப்பொருள் உணர்ந்த குருவின் மூலம் முறையான அகத்தவப் பயிற்சியைக் (Simplified Kundalini Yoga) கற்றுக்கொண்டு, இயற்கைத் தத்துவத்தை அறிந்து, உணர்ந்து, மதித்துப் போற்றி பயின்று பயன் கொள்ள வேண்டும்."

"வாழ்க்கையையும் வாழ்க்கையின் நோக்கத்தையும், அந்நோக்கத்திர்கேற்ற வாழும் முறை என்ன என்பதையும் அறிந்து கொள்வதுதான் "ஞானம்".
.
"கர்மம் = செயல் அல்லது வினை. யோகம் = ஒன்றுபடுதல்".
.
"நல்லதையே செய்யச் செய்ய நல்ல எண்ணங்கள்,
நல்ல செயல்கள், நல்ல வாழ்க்கை வந்துவிடும்"
.
வாழ்க வையகம் வாழ்க வளமுடன்.

- தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி.

புலன் வழி அறிவு:



புலன் வழி அறிவு:
.
ஐம்புலன்கள் வழியாகத் தனக்கும் பிறதோற்றங்கட்கும் அல்லது இருவேறு தோற்றங்கட்கும் இடையே பருமன், விரைவு, காலம், தூரம் ஆகிய நான்கை ஒன்றோடொன்றை ஒப்பிட்டுக் காணும் வேறுபாட்டை உணர்வதும் அவ்வாறு உணரும்போது உடலுக்கும் உயிருக்கும் இடையே ஏற்படும் உயிராற்றலின் சிதைவானது, அழுத்தம், ஒலி, ஒளி, சுவை, மணம் இவையான பஞ்சதன்மாத்திரை இயக்க அளவு உணர்வு இன்பமாகவோ, துன்பமாகவோ அனுபவமாகக் கொள்வதும் புலன் வழியறிவாகும்.
.
மனம் உணர்ச்சியில் எல்லை கட்டித் தனது நிலை மறந்து உணர்ச்சி வயமாகி ஆறுகுணங்களாகச் சூழ்நிலைகட்கொப்ப மாற்றமடைகிறது. இந்த நிலையில் தான் துன்பங்களைப் பெருக்கும் பழிச்செயல்களும் பதிவுகளும் ஏற்படுகின்றன. உயிரில், மூளையில், வித்தில், உயிரணுக்களில் இப்பதிவுகள் மீண்டும், மீண்டும் பிரதிபலிக்கும் போது அதே செயலைச் செய்ய உயிருக்குத் தூண்டுணர்வு ஏற்பட்டுச் செயல் புரியும் பழக்கம் ஏற்படுகிறது.
.
இம்முறையில் செயல்படும் அறிவு நிலையை அறிவின் மயக்கநிலை என்றும் - மாயை என்றும் வழங்குகிறோம். இம் மன நிலையில் வாழ்பவர்கள் துன்பக் கருவூலமாக இருப்பதால் இவர்களை நடைப்பிணம் என்று சில ஞானிகள் மொழிந்தனர்.

வாழ்க வையகம் வாழ்க வளமுடன்.

- தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி.

.
* * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * *
.
"அறிவு அறிவுக்கு அடிமையாவதே "பக்தி."
அறிவை அறிவால் அறியப் பழகுதல் "யோகம்."
அறிவை அறிவால் அறிந்த நிலையே "முக்தி."
அறிவை அறிந்தோர் அன்பின் அறமே "ஞானம்".
.
"அஞ்ஞானம் அறிவினது ஆரம்ப நிலையாகும்.
விஞ்ஞானமோ அறிவின் வேகநிலை,
மெய்ஞ்ஞானம் அறிவதனின் பூரணமாம்,
இஞ்ஞானம் மூன்றும் இயற்கையின் எண்ண நிலை".
.
அமைதியின்மை எதனால்?

"அறிவறிந்தோர் அகத்ததை மெய்ப்பொருளாய்க் காண்பார் அறியாதோர் உடலளவில் எல்லையானார்
அறிவறிந்தோர் ஆறுகுணங்கள் நிறைவமைதி,
அன்பு, கற்போடு, ஞானம், மன்னிப்பாச்சு;
அறிவறியார் அறுகுணத்தால் பகை, பிணக்கு,
அச்சம், போர், இவையாகித் துன்பம் ஏற்பார்
அறிவறிந்த அறியாத ஏற்றத் தாழ்வே
அமைதியின்மை விளைந்துளது மனிதர் வாழ்வில்."
.
வாழ்க வையகம் வாழ்க வளமுடன்.

- தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி.

கணவன் - மனைவி நட்பு :

கணவன் - மனைவி நட்பு :

கணவன் மனைவி நட்பின் மதிப்பை உணர்ந்து அதைக் காக்க வேண்டிய அவசியத்தை நினைவில் கொண்டால் மற்ற தேவையற்ற குறைபாடுகள் எழவே எழாது. நமது மனவளக் கலையில் கணவன் மனைவி இருவரும் ஒருவரை ஒருவர் வாழ்த்திக் கொள்வதை அதிகமாக வலியுறுத்தி வருகிறோம். நட்பையும் அன்பையும் வளர்க்க வாழ்த்து ஒரு ஆற்றல் வாய்ந்த மந்திரமாகும்.

கணவன் மனைவி இருவருமே மனவளக்கலை பயின்றால் நல்ல பயன் கிட்டும். சில காரணங்களால் ஒருவருக்கு இக்கலையில் விருப்பமில்லாமலிருக்கலாம். அதனால் ஒருவரே ஒரு குடும்பத்தில் மனவளக்கலையில் ஈடுபட்டு வரலாம். எனினும் அந்த ஒருவர் சிறப்பாக இக்கலை பயின்று தன் தரம் உயர்த்தி மற்றவர்க்கு நலம் விளைத்தும் வாழ்த்தியும் வந்தால் நிச்சயம் அவரும் குறுகிய காலத்திலேயே இக்கலையில் விருப்பங் கொள்வார்கள்.
.
பல மக்கள் வாழ்வில் தொடர்பு கொண்டு கண்ட உண்மைகளையும், என் வாழ்வில் கண்ட அனுபவங்களையும் வைத்துக் கொண்டே மேற்கண்ட அன்புரைகளை வழங்கியிருக்கிறேன். இரண்டு மூன்று தடவை திருப்பித் திருப்பி படித்து, ஆழ்ந்து சிந்தித்து உங்களுக்கு வேண்டியவற்றை எடுத்துக் கொண்டு நிறைவு பெறுங்கள். எனது அனுபவ அறிவைத் தவிர வேறு என்ன நான் உங்களுக்குக் கொடுக்க முடியும்.

வாழ்க வையகம் வாழ்க வளமுடன்.
- தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி.
.
* * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * *

.
"குடும்ப உறுப்பினர் அனைவருக்குள்ளும்
உறுதியான, நெருக்கமான, உண்மையான
இனிய நட்பு நிலவ வேண்டும்".

.
"கணவன் மனைவி நட்பு தான்
உலகிலேயே மிகவும் மதிப்புமிக்கது".

.
"வாழ்க வளமுடன் என்று சொல்லும் போது பிறர்
உள்ளத்திலே நமது கருத்து நல்லதொரு
இனிய நட்புறவை வளர்க்கிறது".

.
"வாழ்க்கையிலே மேம்பாடாக நற்றுணையாக மதிக்க வேண்டியது
கணவனை மனைவியும், மனைவியை கணவனுமே".
.
"அருவநிலையாய் இயங்கும் அறிவு வாழ்வில்
அவ்வப்போ தொருபொருளின் தொடர்பு கொண்டு
மருவிநிற்கும் நிலைகளைச் சொற்குறிப்பால் காட்ட
மாற்றுப் பெயர்கள் பல உண்டு, அவற்றுள் ஆண்பெண்
இருவர் உளம் ஒன்றுபட்டு உலகில்வாழ
எண்ணத்தால் முடிவுகண்டோ செயலில் கொண்டோ
ஒருவர் ஒருவர்க்கு உடல்பொருளோடாற்றல்
உவந்து அர்ப்பணித்து நிற்கும் நிலையே காதல்."
.
இளமை நோன்பு, இல்லறம், தொண்டு :

"வாழ்வாங்கு வாழ்வதற்குப் பயிற்சி ஏற்கும் முறையை
வகைப்படுத்த இளமை நோன்பாகும்; பொறுப்போடு
வாழ்வாங்கு வாழ ஒரு வாழ்க்கைத் துணை ஏற்று
வழியோடு கடமையுணர்ந்தாற்ற இல்லறம் ஆம்;
வாழ்வினிலே மறைபொருளாம் உயிர் அறிவை உணர
வளமான உளப்பயிற்சி அக நோக்குத்தவமாம்;
வாழ்வதனை முற்றுணர்ந்து அதை அமைதி வெற்றி
வழிகண்டு வாழவைக்கும் பேரறமே தொண்டு".
.
- தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி.

" நீண்ட நாள் மருந்தினால் போகாத நோய் கூட --- குண்டலினி யோகத்தில் - 'துரியாதீத தவத்தால்' போகும்".



" நீண்ட நாள் மருந்தினால் போகாத நோய் கூட
-------------------------------------------------------------------------
குண்டலினி யோகத்தில் - 'துரியாதீத தவத்தால்' போகும்".
------------------------------------------------------------------------------------------


.
"ஜீவகாந்தத்தின் விளைவுதான் மனம். மனம் தன் மூலத்தை அறிவதற்காகவே, அடைவதற்காகவே, விரிகிறது. விரிந்து விரிந்து நிற்கிறது. அனுபோக உணர்ச்சிகளில் இருக்கும் மனதிற்கு வழி தெரியவில்லை; வேகமோ குறையவில்லை; ஆகவே எங்கெங்கோ சென்று நிற்கிறது. எது எதிலேயோ சிக்கிக் கொள்கிறது, துன்புறுகிறது. ஆனால், தன் லட்சியத்தை அடையும் வரை மனதின் விரியும் முயற்சி சோர்வடைவதில்லை. மெய்ப்பொருளை உணர்ந்த பிறகுதான் மனதிற்கு அமைதி கிட்டுகிறது. அதுவரை அமைதி கிடைப்பதேயில்லை.

.
தன் மூலத்தை (ஆதி நிலை) அறிய எழுந்த வேகம் திசை தப்பி நிற்கும் அளவிற்கு அமைதியின்மையின் அளவும், துன்பத்தின் அளவும் இருக்கும். பிராயச்சித்தம், மேல்பதிவு, தேய்த்தழித்தல் (Expiation, Superimposition and Dissolution ) என்று கருமப் பதிவுகளைப் (Sins and Imprints) போக்கிக் கொள்ள மூன்று வழிகள் இருப்பதை நான் பலமுறை விளக்கியுள்ளேன்.

.
அவற்றில் கடைசியான தேயத்தழித்தல் ( Dissolution ) என்பது தவத்தினால் ( Simplified Kundalini Yoga ) தான் சாத்தியமாகும்.

.
ஆக்கினைத் தவத்தினால் ஆகாமிய கர்மம் போகும்.

.
துரியநிலைத் தவத்தில் ஆகாமிய கர்மமும், பிராரப்த கர்மமும் போகும்.

.
துரியாதீத தவத்தில் ஆகாமிய கர்மமும், பிராரப்த கர்மமும், சஞ்சித கர்மம் ஆகிய மூன்றுமே போகும்.

.
நீண்ட நாள் மருந்தினால் போகாத நோய் கூடத் 'துரியாதீத தவத்தால்' போகும். 'துரியாதீத தவம்' ஒரு மாபெரும் புதையல். இதில் எல்லாமே அடக்கம். எந்த அதிர்வியக்கத்தில் ( Mind frequency) மனம் நின்றால் பிரபஞ்ச ரகசியம் எல்லாம் அறியப்படுமோ அந்த இடந்தான் சமாதிநிலை" (ஆதி நிலை). துரியாதீத தவத்தால் இந்நிலையில் நிலைத்து பழக்க, அறிவு அமைதியைப் பெறுகிறது.

.
துரியாதீதம் :
------------------

"தூயப் பெருநிலை துரியாதீதமோ
துயர், மகிழ் விரண்டையே துய்த்த என் அறிவை
காலம், பருமன், தூரம் விரைவெனும்
கணக்கினைக் கடந்து மெய்ப்பொருளோடு இணைத்தது;
இனிப் பழிபுரியேன் புரிந்தவை களைந்தேன்
இறைநிலை உணர்ந்தேன் இணைந்தேன் நிறைந்தேன் ;
இனி என் உடல் உயிர் ஆற்றலை முறைப்படி
இயக்கிக் கடமையை புரிவேன்."

.
சமாதி நிலை :
-------------------

"உடலியக்கம் நின்றுவிட்ட சவத்தை மண்ணில்
உள்புதைத்து சமாதி என்று பூஜை செய்து
உடலியக்கம்பெற்ற பல பொருள் அழித்து
உள அமைதியை இழந்து சோர்ந்தோரேனும்;
உடலியக்கம் அறிவியக்கம் பிறப்பு இறப்பு
உண்மைகளையறிந்து பயன் அடைய வென்றால்
உடலியக்கம் நிற்கும் முன்னே கருதவத்தால்
உள்நாடி சமாதி நிலையறிய வாரீர் ! "

.
வாழ்க வையகம் வாழ்க வளமுடன்.

- தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி.

Tuesday, April 7, 2015

விஞ்ஞானம், மெய்ஞ்ஞானம் :



விஞ்ஞானம், மெய்ஞ்ஞானம் :

உருவம், ஒலி, ஒளி, சுவை, மணம் எனும் ஐந்து விளைவுகளுக்கும் மூலமானதும், மெய்ப்பொருளானதும், காலம், தூரம், பருமன், வேகம் எனும் கணிப்புக்கு அப்பாற்பட்டதும் ஆகிய மெய்ப்பொருளினைப் பற்றியும், ஐயுணர்வுகளாகவும் சிந்தனை ஆற்றலாகவும் உள்ள அறிவைப் பற்றியும் உணர்ந்து கொள்ளும் தெளிவு மெய்ஞ்ஞானம். இயக்கத்தைக் கண்டது விஞ்ஞானம். இயக்க மூலத்தை உணர்ந்தது மெய்ஞ்ஞானம். உடலை வளர்ப்பதும் அதை அழகுபடுத்துவதும் விஞ்ஞானம். உள்ளத்தை மேன்மையாக்குவதும், தூய்மையாக்குவதும் மெய்ஞ்ஞானம். வாழ்வில் சிறப்பளிப்பது விஞ்ஞானம். வாழ்வில் அமைதி தருவது மெய்ஞ்ஞானம். இயங்கி அறிவது விஞ்ஞானம். நிலைத்து உணர்வது மெய்ஞ்ஞானம். வாழ்வின் முன்னேற்றம் "விஞ்ஞானம்" வாழ்வின் சீர்திருத்தம் "மெய்ஞ்ஞானம்".

வாழ்வை வளப்படுத்தும் ஒரு உயர்நிதி விஞ்ஞானம். அந்த நிதியைப் பாதுகாக்கும் பெட்டகம் மெய்ஞ்ஞானம். துணைக்கருவிகளைக் கொண்டு உடல் கருவிகளை ஆற்றல்களைப் பெருக்கிவருகிறது விஞ்ஞானம். உடற்கருவிகளை திறமையோடு ஆற்ற அறிவை முழுமையாக்குகிறது மெய்ஞ்ஞானம். மனிதனுக்கு களிப்பூட்டவல்லது விஞ்ஞானம். அக்களிப்பு சலிப்பாக மாறாமல் அளவு கட்டிக்காவல் புரியவள்ளது மெய்ஞ்ஞானம். மெய்ஞ்ஞானத்தோடு இணைந்த விஞ்ஞானம் வாழ்வின் நலம்காக்கும். மெய்ஞ்ஞானத்தைப் புறக்கணித்த விஞ்ஞானம் வாழ்வின் வளமழிக்கும். மறைபொருள் விளக்கம்தான் மெய்ஞ்ஞானம். உருப்பொருள் விளக்கம் தான் விஞ்ஞானம். அறிவைப் பற்றி, உயிரைப் பற்றி, உயிருக்கும் மூலமெய்ப்பொருளைப் பற்றி அறிந்து கொள்வது மெய்ஞ்ஞானம். உடலைப் பற்றி, உலகைப் பற்றி அறிந்து கொள்வது விஞ்ஞானம். அறிவின் சிறப்பு மெய்ஞ்ஞானம்.

வாழ்க வையகம் வாழ்க வளமுடன்.

- தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி.
.

* * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * *
.

"விஞ்ஞானம் விளக்கைப் போல் இயற்கையில் நிகழ்ந்திடும்
விந்தைகளை மக்களுக்கு வெளிப்படுத்தும் ஒளியென்றால்;
மெய்ஞ்ஞானம் சூரியன் போல் எங்கும் எக்காலத்தும்
மேல் நிலையை அறிவெய்த மிகச் சிறந்த ஒளியாகும்".
.

"அஞ்ஞானம் அறிவினது ஆரம்ப நிலையாகும்.
விஞ்ஞானமோ அறிவின் வேகநிலை,
மெய்ஞ்ஞானம் அறிவதனின் பூரணமாம்,
இஞ்ஞானம் மூன்றும் இயற்கையின் எண்ண நிலை".
.

"விஞ்ஞானம் சிறப்புற்று விண் வெளியுணரப் பெற்றால்
அஞ்ஞானம் மறைந்து விடும் அன்பும் அருளும் பொங்கி
மெய்ஞ்ஞானம் ஒளி வீசும் மெய் உயிர் அறிவறிவு
இஞ்ஞால முழுமைக்கும் ஏற்றமுறும் இன்பமே".
.

- தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி.

Friday, March 13, 2015

மகரிசி வேதாத்திரி கேட்ட குருதட்சனை – உண்மை சம்பவம்

மகான்களாக சிலர் மற்றும் மக்களால் ஏற்றுக்கொள்ளப் படுகின்றார்கள். அறிவுத்திறனும், அன்பும் நிறைந்தவர்கள் கிடைப்பது சற்று கடினம் என வரலாறு சொல்லுகிறது.
நம்முடைய காலக் கட்டத்திலேயே வாழ்ந்து மரித்தவர் வேதாத்திரி. மகரிசி வாழ்க்கையில் நடந்த 100 சுவையான சம்பவங்களை படிக்க நேர்ந்தது. அதல் பகிர வேண்டும் என்று தோன்றியதை இங்கு பதிக்கிறேன்.
“ஒருநாள் ஒரு நண்பர் மகரிசி ரேஸ்க்கு போவது நல்லதா கெட்டதா?” என்றார்.
“அதனால் உங்களுக்கு லாபமா நஷ்டமா?” என எதிர்கேள்வி கேட்டார் மகரிசி.
“முதலில் லாபம் வருவதாக தோன்றுகிறது. ஆனால் கூட்டிகழித்துப் பார்த்தால்
ஏமாற்றமே மிஞ்சுகிறது இது அனுபவத்தால் அறிந்து கொண்டேன்.”
“நீங்கள் கேட்ட கேள்விக்கு உங்களிடமே விடையிருக்கிறதே!.பின் ஏன் என்னிடம் கேட்கின்றீர்கள். விட்டுவிட வேண்டியதுதானே. “
“நானும் போகக் கூடாது என நினைக்கிறேன். ஆனால் முடியவில்லை.”
“உங்கள் தந்தைக்கும் இந்த பழக்கம் இருந்ததா?”
“ஆம், சுவாமி. அவருக்கும் இந்த ரேஸ் பழக்கம் இருந்தது. பெரும்பாலான சொத்துகளை அதில் அழித்துவிட்டார்.”
“உங்கள் தந்தையாரின் எண்ணப் பதிவுகள் கருவமைப்பின் மூலமாக உங்களுக்கும் வந்திருக்கின்றன. அதனால் தவறென அறிவு உணர்த்தியும் மீண்டும், மீண்டும் அதையே செய்துவருகின்றீர்கள்
நீங்கள் நல்லவிதமாக தியானம் செய்து உங்கள் எண்ண ஆற்றலை வலுப்படுத்திக்கொள்ளுங்கள். அதற்கு நான் உதவிசெய்கிறேன்.”
இனி நான் அங்கு செல்லமாட்டேன். அது போன்ற சூழ்நிலையை ஏற்படுத்திக்கொள்ளமாட்டேன்.வாழ்க்கையில் துன்பம் சேர்ப்பது எனக்கு வேண்டாம் என்று தொடர்ந்து சங்கல்பம் செய்து வாருங்கள். எண்ண ஆற்றல் வழுப்பெற்றவுடன் இந்த தவறை விட்டுவிடுவீர்கள். என்று கூறினார்.
ஆனால் எண்ண ஆற்றல் வழுப்பெரும் வரை ரேஸ்க்கு செல்லாமல் தடுக்க வேண்டும் என எண்ணிய வேதாத்திரி “குருதட்சனையாக என்ன கொடுப்பீர்கள்?” என கேட்டார்.
“இந்த பழக்கத்தை விட உதவி புரியும் உங்களுக்கு உயிரையும் தருவேன்” என்றார் அந்த நண்பர்.
உடனே மகரிசி “அதெல்லாம் வேண்டாம். உங்கள் எண்ணங்களில் இருக்கும் ரேஸூக்கு போக வேண்டும் என்ற எண்ணத்தை மட்டும் என்னிடம் தந்துவிடுங்கள்.” என்றார்.
அவ்வாறே வாக்குக் கொடுத்த நண்பர். அதன் பிறகு ரேஸ் பக்கமே போக வில்லை.
மகான்கள் இறைவன் அனுப்பிய தூதுவர்கள். தர்மத்தினை எடுத்துரைத்து எல்லோரும் பின்பற்ற வழிவகை செய்பவர்கள். அதைதான் மகரிசியும் செய்துள்ளார்.


(நன்றி-வேதாத்திரி மகரிசி வாழ்வில் 100 சுவையான நிகழ்ச்சிகள்.)

மனவளக்கலை


தன்னை அறியாதவரை மனதிற்கு அமைதி இல்லை. ஏனெனில், இந்தப் பிறவி எடுத்ததின் நோக்கமே தன்னை அறிவதற்காக எடுக்கப்பெற்றதே. தன்னை அறிய தத்துவ விளக்கங்கள் உதவியாகத் தான் இருக்கும். ஆனால், தன் மூலத்தைத் தானே எட்டி, உள்ளுணர்வாக, அகக் காட்சியாக அறிய யோகமே துணை செய்யும். அந்த யோகத்தை இக்காலத்திற்கேற்ப எளிமைப்படுத்தப் பெற்றதே எளிய முறை குண்டலினி யோகம் எனும் மனவளக்கலை.

- அருட்தந்தை வேதாத்திரி மகரிஷி

Sunday, March 1, 2015

எளிமைப்படுத்தப்பட்ட உடற்பயிற்சி (Simplified Physical Exercises) :



எளிமைப்படுத்தப்பட்ட உடற்பயிற்சி (Simplified Physical Exercises) :
----------------------------------------------------------------------------------------
.

"உயிர் உய்ய வேண்டும். அறிவிற்கு முழுமைப்பேறு கிட்ட வேண்டும். வீடுபேறு வேண்டும். இதை ஒரு பயணமாகக் கருதினால் அப்பயணத்திற்கு உடல்தானே வாகனம். இந்த வாகனத்தைப் பேணிப் பாதுகாத்தால்தான் இந்த ஆன்மீகப் பயணத்தை வெற்றியோடு முடிக்க முடியும். உடற்பயற்சி, தவம் இவை இரண்டும் பாவப் பதிவுகளை எல்லாம் போக்க வல்லவை.
.


உயிர் தான் உடலை நடத்துகிறது. காக்கிறது. உடலில் ஏற்படுகின்ற குழப்பத்தைச் சரிசெய்ய, மருந்து முதலியவை உயிருக்குக் கொடுக்கப்படுகின்ற ஊக்கமும் உதிவியுமே. யோக முறையாகிய நமது "மனவளக்கலை" பயிற்சியால் உயிராற்றல் சேமிப்பு அதிகமாவதால் நோய் எதிர்ப்பாற்றலும், நோய் நீக்குகின்ற ஆற்றலும் நமக்கு எளிதாகக் கிட்டுகிறதென்பதையும் இங்கே சொல்லியாக வேண்டும்.
.

உடலுக்கும் உயிரும் இணைந்த அந்தக் கூட்டுறவிலேயே இந்த வாழ்க்கையானது அமைந்துள்ளது. உடலுக்கும் உயிருக்கும் எப்போது பிணக்கு ஏற்பட்டாலும் அந்தப் பிணக்குதான் நோய். உடலுக்கும் உயிருக்கும் நட்பு நீடித்தால் வாழ்க்கை என்கிறோம். உடலுக்கும் உயிருக்கும் பிரிவு ஏற்பட்டால் மரணம் என்கிறோம்.
.

உயிருக்கும் உடலுக்கும் ஒத்த உறவு இனிமையான உறவு இருக்கின்ற வரையில்தான் உடல் நலமும், மனநலமும் பாதுகாக்கப் பெறும். இந்த உறவானது நீடித்திருப்பதற்கு இரத்த ஓட்டம், வெப்ப ஓட்டம், காற்று ஓட்டம் இவை மூன்றும் சரியாக இருக்க வேண்டும். அளவிலே, முறையிலே இவை சரியாக இருந்தால் தான் உயிருக்கும், உடலுக்கும் ஒரு தொடரியாக்கம் (நட்பு, உறவு) சீராக இருக்கும்.
.

ஆசனங்கள், உடற்பயிற்சிகள் எல்லாவற்றையும் நான் பழகி ஆராய்ந்து இந்திய வைத்திய சாஸ்திரங்களில் கிடைத்த அறிவையும் பயன்படுத்தி ஒரு முழுமையான உடற்பயிற்சித் தொகுதியை வகுத்துள்ளேன். அவைகள்

1) கைப்பயிற்சி (Hand Exercise)
2) கால் பயிற்சி (Foot Reflexology)
3) மூச்சுப் பயிற்சி (Neuro Muscular Breathing Exercise)
4) கண்பயிற்சி (Eye Exercise)
5) மகராசனம் (Maharasanam)
6) உடல் வருடல் (Massage)
7) ஓய்வு தரும் பயிற்சி (Acu Pressure & Relaxation) என்பனவாகும்.
.

அறிவின் முழுமைப்பேறு அடைய நாம் பிறவி எடுத்துள்ளோம். அதற்கு அறிவு சுதந்திரமாக இயங்க வேண்டும். உடலின்றி அறிவிற்கு இயக்கமில்லை. ஆகவே அறிவு சரிவர இயங்கவும் உடலை நோய் நொடியின்றி, வேறு எக்குறையும் இன்றிப் பாதுகாத்துக் கொள்ள வேண்டியது தலையாய கடமை. எப்போதும் சமநிலை உணர்வோடு பழகி, உடல் நலம் கெடாதபடி விழிப்போடு செயலாற்றி நலமடைவோமாக.
.

"உள்ளம் பெருங்கோயில் ஊனுடம்பு ஆலயம்
வள்ளல் பிரானார்க்கு வாய் கோபுர வாசல்
தெள்ளத் தெளிந்தார்க்குச் சீவன் சிவலிங்கம்
கள்ளப் புலனைந்தும் காளா மணிவிளக்கே என்றும்,
.

உடம்பார் அழியின் உயிரார் அழிவர்
திடம்பட மெய்ஞ்ஞானம் தேரவும் மாட்டார்
உடம்பை வளர்க்கும் உபாயம் அறிந்தே
உடம்பை வளர்த்தேன் உயிர் வளர்த்தேனே என்றும்,
.

உடம்பினை முன்னம் இழுக்கென் றிருந்தேன்
உடம்பினுக் குள்ளே உறுபொருள் கண்டேன்
உடம்புள்ளே உத்தமன் கோயில் கொண்டா னென்று
உடம்பினை யானிருந்து ஓம்புகின் றேனே" என்றும்
.

திருமூலர் கூறியுள்ளார். எனவே இந்த உடலை ஆரோக்கியத்தோடு வைத்துக்கொள்ளவும், அதற்காக நாம் முயற்சிகள் மேற்கொள்ளவும் வேண்டும்."
.

வாழ்க வையகம் வாழ்க வளமுடன்.

- தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி.

"சுவாமிஜி, மரணத்தருவாயில் எண்ணம் எப்படி இருக்கும்?"



கேள்வி :-


"சுவாமிஜி, மரணத்தருவாயில் எண்ணம் எப்படி இருக்கும்?"

.


மகரிசியின் பதில்: -


" கடைசி எண்ணமானது உயிர் விடும் மனிதனின் குணத்தைப் பொருத்தது. ஆன்மீகப் பயிற்சியிலேயே சிந்தனை செய்து கொண்டிருந்தவர் மரணமுறும் போது தெய்வீக எண்ணங்களாகத் தோன்றும். சிற்றின்பப் பிரியர்களுக்குக் கடைசி நேரத்திலும் சிற்றின்பம் பற்றிய எண்ணமே தோன்றும். கடைசி எண்ணம் என்பது ஏதோ கடைசி கடைசியாகத் திடுக்கென்று வந்துவிடுவதில்லை. வாழ்நாளெல்லாம் எந்தத் தன்மையை ஒருவர் உருவாக்கிக் கொண்டாரோ அதற்கு நிகரான எண்ணமேதான் கடைசியிலும் தோன்றும்.

.


இறைநிலையடைய வேண்டும் என்று ஆசைப்படுபவர், வாழ்நாளெல்லாம் அதே முயற்சி பயிற்சியில் இருந்தால்தான் கடைசி எண்ணமும் அதே போன்று ஏற்பட்டு, அவரது வாழ்நாளின்பின் அவருக்கு இறைநிலை சித்திக்கும்.

.


அப்படியின்றி தவறான முறையில் வாழும் ஒருவருக்குக் கடைசி கடைசியாகவும் கீழான எண்ணமே தோன்றி, அவரது ஆன்மாவானது அத்தகு தன்மை கொண்ட வாழ்வோரைப் பற்றிக் கொண்டு தன் எண்ணத்தையும் ஆசையையும் அவர் மூலம் பூர்த்தி செய்து கொள்ளும்.

.


வாழ்க வையகம் வாழ்க வளமுடன்.


- தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி.


.

********************************************************************

.


"வேதத்தின் உட்பொருளையறிய வென்றால்

விவாதத்தால் முடியாது, அறிவை ஒன்றிப்

பேதமாய்க் காணும் கற்பனைத் தோற்றங்கள்

பிறக்குமிடம் கண்டு நிற்க; வேதம் என்ற

போதனைகளில் பொதிந்த கருத்துயர்வும்

பூவுலக மாந்தர்களைப் பண்படுத்தி

நாதத்தின் மூலமென்ற மௌனம் காட்டி

நான் யார் என்றறிய வைக்கும் மார்க்கமாகும் !."

.


உயர் அறிவு:


"புலனைந்தின் துணைகொண்டு பூவுலகை அனுபவித்து

புலன் தொடர்பற்று ஆராயும் புதுமையே ஆறாம் அறிவாம் ;

புலன் கடந்த செயல் முடிவே பூர்வ நிலை அறிவறிதல்

புலன் கடந்த அவ்விடத்தே பொருத்தி வாழ்வான் ஞானி."

.


உயிர் விளக்கம் :-


" உடல் உயிர் இரண்டிற்கும் வித்தே மூலம்

உட்பொருளே மெய்ப்பொருளாம் உண்மை தேர்வீர்

உடல் என்ப தணுக்கள் பலசேர்ந்த கூட்டு

உயிர் என்பதோ அணுவின் நுண்துகள் ஆம் ;

உடல் ஊடே உயிர் சுற்றிச் சுழன்றியங்க

உணர்ச்சி யென்ற விளைவுண்டாம் அறிவு ஈதே

உடலை விட்டு உயிர் பிரிந்தால் அறிவங்கேது

உடல் வாழ்விற்குள் தான் இன்பம் துன்பம்."

.


வாழ்க வையகம் வாழ்க வளமுடன்.


- தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி.