இருப்புநிலை, சூன்யம், ஒன்றுமில்லாதது என்று பலரும் எண்ணுகின்றனர். இது தவறானது. இருப்புநிலை எல்லாவற்றையும் தன்னுள் பெற்றுள்ளது. அனைத்து பொருளும் இங்கிருந்து தான் ஆரம்பிக்கின்றது. இதனுள் இயங்குகின்றது. இருப்புநிலையை கடல் என்று நாம் எண்ணினால் பிரபஞ்சத்தில் உள்ள மிகச்சிறிய பொருள்களிலிருந்து மிகப் பெரிய பொருள் வரை அதன் இயக்கங்கள், சக்திகள் அனைத்தும் கடலில் தோன்றுகின்ற அலைகளாகும். அலைகள் கடலில் தோன்றி, கடலின்மேல் அசைந்து, கடலில் முடிவடைகின்றது. அதே போன்று மிகச்சிறிய பொருளிலிருந்து மிகப் பெரிய சூரியன் வரை உள்ள அனைத்து பொருள்களும், உயிர்வாழும் ஜீவன்களும் இருப்புநிலையிலிருந்து (Static State) தோன்றி, அதனுள் இயங்கி, அதனுள்ளே முடிவடைகின்றது.
நீக்கமற நிறைந்துள்ள பூரணத்தில் பிரபஞ்சத்தில் உள்ள அனைத்தும் இருப்பு நிலையில் மிதக்கின்றன. அசைகின்றன. தண்ணீரில் அதன் நுரை மிக நின்றாகத் தெரியும். நீரில் நுரை மிதப்பதைப் போன்று அனைத்துப் பொருள்களும் பூரணத்தில் மிதந்து கொண்டு உள்ளன. எண்ணிப் பாருங்கள். ஒரு பொருள், அதன்மேல் மற்றொரு பொருள் இதில் எது சக்திவாய்ந்தது. அசைகின்ற ஒவ்வொரு பொருளையும் தன்னிடம் பிடித்துக் கொண்டிருப்பது இருப்புநிலை. பிரபஞ்சம் முழுதும் பூரணத்தில் அடங்கியுள்ளது. பூரணத்தில் மிதந்து கொண்டும் இயங்கிக் கொண்டும் இருக்கிறது. சுற்றிலும் சூழ்ந்துள்ள இருப்புநிலையின் அழுத்தத்தால் பிரபஞ்சத்தில் உள்ள ஒவ்வொரு துகளும் தற்சுழற்சி வேகத்துடன் இயங்கிக் கொண்டுள்ளது. பொருள்களின் தன்மைக்கேற்ப பிரபஞ்சம் முழுதும் வெவ்வேறு வேகத்துடன் அவைகள் இயங்கிக் கொண்டுள்ளது. இருப்புநிலையே எல்லாம் வல்லது, அதுவே ஆதிநிலை.
- தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி.
வாழ்க வையகம் வாழ்க வளமுடன்
No comments:
Post a Comment