Sunday, March 1, 2015

எளிமைப்படுத்தப்பட்ட உடற்பயிற்சி (Simplified Physical Exercises) :



எளிமைப்படுத்தப்பட்ட உடற்பயிற்சி (Simplified Physical Exercises) :
----------------------------------------------------------------------------------------
.

"உயிர் உய்ய வேண்டும். அறிவிற்கு முழுமைப்பேறு கிட்ட வேண்டும். வீடுபேறு வேண்டும். இதை ஒரு பயணமாகக் கருதினால் அப்பயணத்திற்கு உடல்தானே வாகனம். இந்த வாகனத்தைப் பேணிப் பாதுகாத்தால்தான் இந்த ஆன்மீகப் பயணத்தை வெற்றியோடு முடிக்க முடியும். உடற்பயற்சி, தவம் இவை இரண்டும் பாவப் பதிவுகளை எல்லாம் போக்க வல்லவை.
.


உயிர் தான் உடலை நடத்துகிறது. காக்கிறது. உடலில் ஏற்படுகின்ற குழப்பத்தைச் சரிசெய்ய, மருந்து முதலியவை உயிருக்குக் கொடுக்கப்படுகின்ற ஊக்கமும் உதிவியுமே. யோக முறையாகிய நமது "மனவளக்கலை" பயிற்சியால் உயிராற்றல் சேமிப்பு அதிகமாவதால் நோய் எதிர்ப்பாற்றலும், நோய் நீக்குகின்ற ஆற்றலும் நமக்கு எளிதாகக் கிட்டுகிறதென்பதையும் இங்கே சொல்லியாக வேண்டும்.
.

உடலுக்கும் உயிரும் இணைந்த அந்தக் கூட்டுறவிலேயே இந்த வாழ்க்கையானது அமைந்துள்ளது. உடலுக்கும் உயிருக்கும் எப்போது பிணக்கு ஏற்பட்டாலும் அந்தப் பிணக்குதான் நோய். உடலுக்கும் உயிருக்கும் நட்பு நீடித்தால் வாழ்க்கை என்கிறோம். உடலுக்கும் உயிருக்கும் பிரிவு ஏற்பட்டால் மரணம் என்கிறோம்.
.

உயிருக்கும் உடலுக்கும் ஒத்த உறவு இனிமையான உறவு இருக்கின்ற வரையில்தான் உடல் நலமும், மனநலமும் பாதுகாக்கப் பெறும். இந்த உறவானது நீடித்திருப்பதற்கு இரத்த ஓட்டம், வெப்ப ஓட்டம், காற்று ஓட்டம் இவை மூன்றும் சரியாக இருக்க வேண்டும். அளவிலே, முறையிலே இவை சரியாக இருந்தால் தான் உயிருக்கும், உடலுக்கும் ஒரு தொடரியாக்கம் (நட்பு, உறவு) சீராக இருக்கும்.
.

ஆசனங்கள், உடற்பயிற்சிகள் எல்லாவற்றையும் நான் பழகி ஆராய்ந்து இந்திய வைத்திய சாஸ்திரங்களில் கிடைத்த அறிவையும் பயன்படுத்தி ஒரு முழுமையான உடற்பயிற்சித் தொகுதியை வகுத்துள்ளேன். அவைகள்

1) கைப்பயிற்சி (Hand Exercise)
2) கால் பயிற்சி (Foot Reflexology)
3) மூச்சுப் பயிற்சி (Neuro Muscular Breathing Exercise)
4) கண்பயிற்சி (Eye Exercise)
5) மகராசனம் (Maharasanam)
6) உடல் வருடல் (Massage)
7) ஓய்வு தரும் பயிற்சி (Acu Pressure & Relaxation) என்பனவாகும்.
.

அறிவின் முழுமைப்பேறு அடைய நாம் பிறவி எடுத்துள்ளோம். அதற்கு அறிவு சுதந்திரமாக இயங்க வேண்டும். உடலின்றி அறிவிற்கு இயக்கமில்லை. ஆகவே அறிவு சரிவர இயங்கவும் உடலை நோய் நொடியின்றி, வேறு எக்குறையும் இன்றிப் பாதுகாத்துக் கொள்ள வேண்டியது தலையாய கடமை. எப்போதும் சமநிலை உணர்வோடு பழகி, உடல் நலம் கெடாதபடி விழிப்போடு செயலாற்றி நலமடைவோமாக.
.

"உள்ளம் பெருங்கோயில் ஊனுடம்பு ஆலயம்
வள்ளல் பிரானார்க்கு வாய் கோபுர வாசல்
தெள்ளத் தெளிந்தார்க்குச் சீவன் சிவலிங்கம்
கள்ளப் புலனைந்தும் காளா மணிவிளக்கே என்றும்,
.

உடம்பார் அழியின் உயிரார் அழிவர்
திடம்பட மெய்ஞ்ஞானம் தேரவும் மாட்டார்
உடம்பை வளர்க்கும் உபாயம் அறிந்தே
உடம்பை வளர்த்தேன் உயிர் வளர்த்தேனே என்றும்,
.

உடம்பினை முன்னம் இழுக்கென் றிருந்தேன்
உடம்பினுக் குள்ளே உறுபொருள் கண்டேன்
உடம்புள்ளே உத்தமன் கோயில் கொண்டா னென்று
உடம்பினை யானிருந்து ஓம்புகின் றேனே" என்றும்
.

திருமூலர் கூறியுள்ளார். எனவே இந்த உடலை ஆரோக்கியத்தோடு வைத்துக்கொள்ளவும், அதற்காக நாம் முயற்சிகள் மேற்கொள்ளவும் வேண்டும்."
.

வாழ்க வையகம் வாழ்க வளமுடன்.

- தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி.

No comments:

Post a Comment