Saturday, October 11, 2014

ஆராய்ச்சி, முயற்சி, வெற்றி :



ஆராய்ச்சி, முயற்சி, வெற்றி :

கவலை என்பது மனித சக்தியைக் குன்றச் செய்யும் அறிவின் திசை மாற்றமேயாகும். ஒரு நிமிடம் கூட கவலை என்ற பாதைக்கு எண்ண வேகத்தை விட வேண்டாம். துணிவும் விழிப்பும் கொண்டு முயற்சியாக மாற்றிக் கொள்வதே சிந்தனையாளர்களின் கடமை. கவலை என்பது உடல், அறிவு, குடும்பம், ஊர் உலகம் என்ற துறைகள் அனைத்திற்கும் மனிதனுக்கு நஷ்டமே தரும். முயற்சி எவ்வகையிலேயும் லாபமே தரும்.

இயற்கை வளம் என்ற இன்பப் பேரூற்று மக்களின் அறியாமை என்ற அடுக்குப் பாறைகளால் பலதுறைகளில் மறைக்கப்பட்டுள்ளது. அறிவின் விளக்கமான துணிவு என்ற திருகுயந்திரம் கொண்டு வேண்டிய அளவில் அவ்வின்பத்தை அனுபவிக்கலாம். தேவையுணர்வு, சந்தர்ப்பம் என்பனவற்றால் செயல்களும், செயல்களால் உடலுக்கும், அறிவிற்கும் ஒருவிதமான பழக்கமும் ஏற்பட்டு அப்பழக்கத்திலிருந்து விடுபட முடியாமல் எண்ணமும் உடலியக்கமும் நடைபெற்று வருதல் மனிதருக்கு இயல்பு என்றாலும், சிந்தனை, துணிவு, விடாமுயற்சி என்பனவற்றின் மூலம் பழக்கத்தை மாற்றி வாழ்வில் மறுமலர்ச்சி ஏற்படுத்திக் கொள்ள முடியும்.

ஆராய்ச்சி ! முயற்சி !! வெற்றி !!! என்ற மந்திரத்தை தினந்தோறும் பல தடவை, நேரம் கிடைக்கும் போதெல்லாம் சில நாட்களுக்குச் செபித்துக் கொண்டே வர கவலை என்ற வியாதியும் ஒழியும். வாழ்வில் ஒரு புதிய தெளிவான பாதை திறக்கப்படும்.

வாழ்க வையகம் வாழ்க வளமுடன்.

- தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி.

"ஆக்கத்துறையில் அறிவைச் செலுத்து
ஊக்கமுடன் உழை, உயர்வு நிச்சயம்".
.

"கவலை யென்பதுள்ளத்தின் கொடிய நோயாம்
கணக்குத் தவறாய் எண்ணம் ஆற்றலாம்,
கவலை யென்பதோ வாழ்வில் சிக்கல் கண்டு
கலங்கி மனம் திகைப்படையும் நிலைமையாகும்;
கவலை உடல்நலம் உள்ள நலன் கெடுக்கும்
கண் முதலாய்ப் பொறி ஐந்தின் வளம் கெடுக்கும்,
கவலையினை முயற்சி சிந்தனை இவற்றால்
கடமையினைத் தேர்ந்தாற்றி வெற்றி கொள்வோம்".

.
- தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி.