Tuesday, July 7, 2015

புலன் வழி அறிவு:



புலன் வழி அறிவு:
.
ஐம்புலன்கள் வழியாகத் தனக்கும் பிறதோற்றங்கட்கும் அல்லது இருவேறு தோற்றங்கட்கும் இடையே பருமன், விரைவு, காலம், தூரம் ஆகிய நான்கை ஒன்றோடொன்றை ஒப்பிட்டுக் காணும் வேறுபாட்டை உணர்வதும் அவ்வாறு உணரும்போது உடலுக்கும் உயிருக்கும் இடையே ஏற்படும் உயிராற்றலின் சிதைவானது, அழுத்தம், ஒலி, ஒளி, சுவை, மணம் இவையான பஞ்சதன்மாத்திரை இயக்க அளவு உணர்வு இன்பமாகவோ, துன்பமாகவோ அனுபவமாகக் கொள்வதும் புலன் வழியறிவாகும்.
.
மனம் உணர்ச்சியில் எல்லை கட்டித் தனது நிலை மறந்து உணர்ச்சி வயமாகி ஆறுகுணங்களாகச் சூழ்நிலைகட்கொப்ப மாற்றமடைகிறது. இந்த நிலையில் தான் துன்பங்களைப் பெருக்கும் பழிச்செயல்களும் பதிவுகளும் ஏற்படுகின்றன. உயிரில், மூளையில், வித்தில், உயிரணுக்களில் இப்பதிவுகள் மீண்டும், மீண்டும் பிரதிபலிக்கும் போது அதே செயலைச் செய்ய உயிருக்குத் தூண்டுணர்வு ஏற்பட்டுச் செயல் புரியும் பழக்கம் ஏற்படுகிறது.
.
இம்முறையில் செயல்படும் அறிவு நிலையை அறிவின் மயக்கநிலை என்றும் - மாயை என்றும் வழங்குகிறோம். இம் மன நிலையில் வாழ்பவர்கள் துன்பக் கருவூலமாக இருப்பதால் இவர்களை நடைப்பிணம் என்று சில ஞானிகள் மொழிந்தனர்.

வாழ்க வையகம் வாழ்க வளமுடன்.

- தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி.

.
* * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * *
.
"அறிவு அறிவுக்கு அடிமையாவதே "பக்தி."
அறிவை அறிவால் அறியப் பழகுதல் "யோகம்."
அறிவை அறிவால் அறிந்த நிலையே "முக்தி."
அறிவை அறிந்தோர் அன்பின் அறமே "ஞானம்".
.
"அஞ்ஞானம் அறிவினது ஆரம்ப நிலையாகும்.
விஞ்ஞானமோ அறிவின் வேகநிலை,
மெய்ஞ்ஞானம் அறிவதனின் பூரணமாம்,
இஞ்ஞானம் மூன்றும் இயற்கையின் எண்ண நிலை".
.
அமைதியின்மை எதனால்?

"அறிவறிந்தோர் அகத்ததை மெய்ப்பொருளாய்க் காண்பார் அறியாதோர் உடலளவில் எல்லையானார்
அறிவறிந்தோர் ஆறுகுணங்கள் நிறைவமைதி,
அன்பு, கற்போடு, ஞானம், மன்னிப்பாச்சு;
அறிவறியார் அறுகுணத்தால் பகை, பிணக்கு,
அச்சம், போர், இவையாகித் துன்பம் ஏற்பார்
அறிவறிந்த அறியாத ஏற்றத் தாழ்வே
அமைதியின்மை விளைந்துளது மனிதர் வாழ்வில்."
.
வாழ்க வையகம் வாழ்க வளமுடன்.

- தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி.

No comments:

Post a Comment