Tuesday, July 7, 2015

அத்வைதம் த்வைதம் :



அத்வைதம் த்வைதம் :
--------------------------------


.
நீங்கள் கடையில் தேங்காய் வாங்குகிறீர்கள்; தேங்காய்க்குள் தண்ணீர் இருக்கிறது. நீங்கள் ஒரு எலுமிச்சம் பழம் வாங்குகிறீர்கள்; அதற்குள்ளும் நீர் இருக்கிறது, அதை ஜூஸ் (Juice) என்கிறோம். இதேபோல எந்த இடத்தில் நீர் இருந்தாலும் அது நமக்குத் தேவைப்படுவதாகவே உள்ளது. சில இலைகளில் கூட நீர் இருக்கிறது; கசக்கிப் பிழிந்து அதை உபயோகப்படுத்துகிறோம். ஒவ்வொன்றிலிருந்து கிடைக்கும் நீருக்கும், தனித்தனிப் பெயர்களைக் கொடுத்து அவற்றை உபயோகப்படுத்துகிறோம்.

.
இதே நீரின் மூலம் என்ன? தேங்காய்க்குள் எப்படி தண்ணீர் வந்தது? நிலத்திலிருந்து தானே? அப்படியானால் நிலத்திற்கு, பூமிக்கு எப்படி தண்ணீர் வந்தது? மழையிலிருந்து வந்தது, மழை எப்படி நீரைப் பெற்றது. கடலிலிருந்து, கடல்நீர் ஆவியாகி மேகமாக மாறுவதால் வந்தது.

.
இதே தத்துவம் தான் எலுமிச்சம் பழத்திலுள்ள நீருக்கும், இலைகளில் உள்ள நீருக்கும் ஏற்றது. தேங்காய்க்குள்ளும் எலுமிச்சம் பழத்திற்குள்ளும், இலைகளுக்குள்ளும், எல்லாவற்றிலும் கடல் நீரைத் தானே காண்கிறோம்? இதுதான் அத்வைதம்.

.
பரிணாம வளர்ச்சியில் ஏற்படும் மாற்றங்களையெல்லாம் மறந்து விடாமல் மூலத்தைப் பார்க்க வேண்டும்.

.
வாழ்க வையகம் வாழ்க வளமுடன்.

- தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி.

.
* * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * *
.
"மனிதனே நீயார்? சொல்!
மனமென்பதெது ? கூறு!
மயங்கினாயேல் நீ மதிக்கும்
மற்றவெலாம் சரியாகா! "

.
கடவுள் :

"உருவங்கள் கோடான கோடியாய், அவை
யுள்ளும் புறமும் அரூபமாய்,
ஊடுருவி நிறைந்தியங்கும் ஒருசக்தி,
உயிராகும், இயற்கையாகும் கடவுளாகும்."

.
அத்வைதம், துவைதம் :
--------------------------------------

"கற்கண்டு என்ற ஒரு வார்த்தை சொன்னால்
கரும்பு ரசப்பக்குவத்தின் சரித்திரமாகும்
கற்கண்டைக் கரும்பு ரசம் என்றால் அஃது
கருத்துக்கு அத்துவித தத்துவம்போல்
கற்கண்டு கரும்புரசம் வேறு வேறாய்க்
காட்டுவது துவித நிலை விளக்கம் ஒக்கும்
கற்கண்டு கரும்புரசம் இரண்டும் போலாம்
கடவுளும் மற்றனைத்துருவும் கருத்துணர்ந்தால்.

.
- தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி

மனதின் தரத்தை உயர்த்தும் எளிமைப்படுத்தப்பட்ட குண்டலினி யோகம் (Simplified Kundalini Yoga)



மனதின் தரத்தை உயர்த்தும் எளிமைப்படுத்தப்பட்ட
------------------------------------------------------------------------
குண்டலினி யோகம் (Simplified Kundalini Yoga)
-------------------------------------------------------------
.
"உலக உயிர்கள் அனைத்திலும் மனிதன் மிகவும் உயர்ந்தவன். இயற்கையின் பரிணாமச் சிறப்புகள் அனைத்தும் அவனிடம் ஒருங்கிணைந்துள்ளன. மனிதனிடம் இவ்வளவு பேராற்றல் இருந்தும் அவன் தன் ஆற்றலின் பெருமையை, தன் ஆற்றலின் முழுமையை மறந்திருக்கிறான். அதனால் அப்பேராற்றல் அவனிடம் இயக்கம் பெறாமல் பலம் குன்றியிருக்கின்றது. இதை மூட நிலை எனலாம். 'மூடம்' என்றால் 'மறைவு' என்று பொருள். அறிவு இருந்தும் அது அவனிடம் இயக்கம் பெறாமல் இருப்பவன். அறிவு இருப்பது வெளிப்படாமல், அதாவது மறைவாக இருக்கும் நிலையில் உள்ளது. இயக்கம் பெறாமல் தடைப்பட்டிருக்கும் நிலையாகும். இந்த நிலை மாற வேண்டும். இந்த நிலை மாற வேண்டுமானால் தகுந்த மனப் பயிற்சியின்றி முடியவே முடியாது.
.
ஏனெனில், தவறிழைப்பதும் மனம்; இனித் தவறு செய்துவிடக்கூடாது என்று தீர்மானிப்பதும் அதே மனம்தான். தவறு செய்யாத வழியைத் தேர்ந்து ஒழுகவேண்டியதும் மனமே. மனதை பழைய நிலையிலேயே வைத்துக்கொண்டு புதிய வழியில் செல்வது எப்படி முடியும் ? முடியாது; மனம் தான் தனக்குத்தானே வைத்தியம் செய்து கொள்ள வேண்டும். அதற்கு மெய்ப்பொருள் உணர்ந்த குருவின் மூலம் முறையான அகத்தவப் பயிற்சியைக் (Simplified Kundalini Yoga) கற்றுக்கொண்டு, இயற்கைத் தத்துவத்தை அறிந்து, உணர்ந்து, மதித்துப் போற்றி பயின்று பயன் கொள்ள வேண்டும்."

"வாழ்க்கையையும் வாழ்க்கையின் நோக்கத்தையும், அந்நோக்கத்திர்கேற்ற வாழும் முறை என்ன என்பதையும் அறிந்து கொள்வதுதான் "ஞானம்".
.
"கர்மம் = செயல் அல்லது வினை. யோகம் = ஒன்றுபடுதல்".
.
"நல்லதையே செய்யச் செய்ய நல்ல எண்ணங்கள்,
நல்ல செயல்கள், நல்ல வாழ்க்கை வந்துவிடும்"
.
வாழ்க வையகம் வாழ்க வளமுடன்.

- தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி.

புலன் வழி அறிவு:



புலன் வழி அறிவு:
.
ஐம்புலன்கள் வழியாகத் தனக்கும் பிறதோற்றங்கட்கும் அல்லது இருவேறு தோற்றங்கட்கும் இடையே பருமன், விரைவு, காலம், தூரம் ஆகிய நான்கை ஒன்றோடொன்றை ஒப்பிட்டுக் காணும் வேறுபாட்டை உணர்வதும் அவ்வாறு உணரும்போது உடலுக்கும் உயிருக்கும் இடையே ஏற்படும் உயிராற்றலின் சிதைவானது, அழுத்தம், ஒலி, ஒளி, சுவை, மணம் இவையான பஞ்சதன்மாத்திரை இயக்க அளவு உணர்வு இன்பமாகவோ, துன்பமாகவோ அனுபவமாகக் கொள்வதும் புலன் வழியறிவாகும்.
.
மனம் உணர்ச்சியில் எல்லை கட்டித் தனது நிலை மறந்து உணர்ச்சி வயமாகி ஆறுகுணங்களாகச் சூழ்நிலைகட்கொப்ப மாற்றமடைகிறது. இந்த நிலையில் தான் துன்பங்களைப் பெருக்கும் பழிச்செயல்களும் பதிவுகளும் ஏற்படுகின்றன. உயிரில், மூளையில், வித்தில், உயிரணுக்களில் இப்பதிவுகள் மீண்டும், மீண்டும் பிரதிபலிக்கும் போது அதே செயலைச் செய்ய உயிருக்குத் தூண்டுணர்வு ஏற்பட்டுச் செயல் புரியும் பழக்கம் ஏற்படுகிறது.
.
இம்முறையில் செயல்படும் அறிவு நிலையை அறிவின் மயக்கநிலை என்றும் - மாயை என்றும் வழங்குகிறோம். இம் மன நிலையில் வாழ்பவர்கள் துன்பக் கருவூலமாக இருப்பதால் இவர்களை நடைப்பிணம் என்று சில ஞானிகள் மொழிந்தனர்.

வாழ்க வையகம் வாழ்க வளமுடன்.

- தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி.

.
* * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * *
.
"அறிவு அறிவுக்கு அடிமையாவதே "பக்தி."
அறிவை அறிவால் அறியப் பழகுதல் "யோகம்."
அறிவை அறிவால் அறிந்த நிலையே "முக்தி."
அறிவை அறிந்தோர் அன்பின் அறமே "ஞானம்".
.
"அஞ்ஞானம் அறிவினது ஆரம்ப நிலையாகும்.
விஞ்ஞானமோ அறிவின் வேகநிலை,
மெய்ஞ்ஞானம் அறிவதனின் பூரணமாம்,
இஞ்ஞானம் மூன்றும் இயற்கையின் எண்ண நிலை".
.
அமைதியின்மை எதனால்?

"அறிவறிந்தோர் அகத்ததை மெய்ப்பொருளாய்க் காண்பார் அறியாதோர் உடலளவில் எல்லையானார்
அறிவறிந்தோர் ஆறுகுணங்கள் நிறைவமைதி,
அன்பு, கற்போடு, ஞானம், மன்னிப்பாச்சு;
அறிவறியார் அறுகுணத்தால் பகை, பிணக்கு,
அச்சம், போர், இவையாகித் துன்பம் ஏற்பார்
அறிவறிந்த அறியாத ஏற்றத் தாழ்வே
அமைதியின்மை விளைந்துளது மனிதர் வாழ்வில்."
.
வாழ்க வையகம் வாழ்க வளமுடன்.

- தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி.

கணவன் - மனைவி நட்பு :

கணவன் - மனைவி நட்பு :

கணவன் மனைவி நட்பின் மதிப்பை உணர்ந்து அதைக் காக்க வேண்டிய அவசியத்தை நினைவில் கொண்டால் மற்ற தேவையற்ற குறைபாடுகள் எழவே எழாது. நமது மனவளக் கலையில் கணவன் மனைவி இருவரும் ஒருவரை ஒருவர் வாழ்த்திக் கொள்வதை அதிகமாக வலியுறுத்தி வருகிறோம். நட்பையும் அன்பையும் வளர்க்க வாழ்த்து ஒரு ஆற்றல் வாய்ந்த மந்திரமாகும்.

கணவன் மனைவி இருவருமே மனவளக்கலை பயின்றால் நல்ல பயன் கிட்டும். சில காரணங்களால் ஒருவருக்கு இக்கலையில் விருப்பமில்லாமலிருக்கலாம். அதனால் ஒருவரே ஒரு குடும்பத்தில் மனவளக்கலையில் ஈடுபட்டு வரலாம். எனினும் அந்த ஒருவர் சிறப்பாக இக்கலை பயின்று தன் தரம் உயர்த்தி மற்றவர்க்கு நலம் விளைத்தும் வாழ்த்தியும் வந்தால் நிச்சயம் அவரும் குறுகிய காலத்திலேயே இக்கலையில் விருப்பங் கொள்வார்கள்.
.
பல மக்கள் வாழ்வில் தொடர்பு கொண்டு கண்ட உண்மைகளையும், என் வாழ்வில் கண்ட அனுபவங்களையும் வைத்துக் கொண்டே மேற்கண்ட அன்புரைகளை வழங்கியிருக்கிறேன். இரண்டு மூன்று தடவை திருப்பித் திருப்பி படித்து, ஆழ்ந்து சிந்தித்து உங்களுக்கு வேண்டியவற்றை எடுத்துக் கொண்டு நிறைவு பெறுங்கள். எனது அனுபவ அறிவைத் தவிர வேறு என்ன நான் உங்களுக்குக் கொடுக்க முடியும்.

வாழ்க வையகம் வாழ்க வளமுடன்.
- தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி.
.
* * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * *

.
"குடும்ப உறுப்பினர் அனைவருக்குள்ளும்
உறுதியான, நெருக்கமான, உண்மையான
இனிய நட்பு நிலவ வேண்டும்".

.
"கணவன் மனைவி நட்பு தான்
உலகிலேயே மிகவும் மதிப்புமிக்கது".

.
"வாழ்க வளமுடன் என்று சொல்லும் போது பிறர்
உள்ளத்திலே நமது கருத்து நல்லதொரு
இனிய நட்புறவை வளர்க்கிறது".

.
"வாழ்க்கையிலே மேம்பாடாக நற்றுணையாக மதிக்க வேண்டியது
கணவனை மனைவியும், மனைவியை கணவனுமே".
.
"அருவநிலையாய் இயங்கும் அறிவு வாழ்வில்
அவ்வப்போ தொருபொருளின் தொடர்பு கொண்டு
மருவிநிற்கும் நிலைகளைச் சொற்குறிப்பால் காட்ட
மாற்றுப் பெயர்கள் பல உண்டு, அவற்றுள் ஆண்பெண்
இருவர் உளம் ஒன்றுபட்டு உலகில்வாழ
எண்ணத்தால் முடிவுகண்டோ செயலில் கொண்டோ
ஒருவர் ஒருவர்க்கு உடல்பொருளோடாற்றல்
உவந்து அர்ப்பணித்து நிற்கும் நிலையே காதல்."
.
இளமை நோன்பு, இல்லறம், தொண்டு :

"வாழ்வாங்கு வாழ்வதற்குப் பயிற்சி ஏற்கும் முறையை
வகைப்படுத்த இளமை நோன்பாகும்; பொறுப்போடு
வாழ்வாங்கு வாழ ஒரு வாழ்க்கைத் துணை ஏற்று
வழியோடு கடமையுணர்ந்தாற்ற இல்லறம் ஆம்;
வாழ்வினிலே மறைபொருளாம் உயிர் அறிவை உணர
வளமான உளப்பயிற்சி அக நோக்குத்தவமாம்;
வாழ்வதனை முற்றுணர்ந்து அதை அமைதி வெற்றி
வழிகண்டு வாழவைக்கும் பேரறமே தொண்டு".
.
- தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி.

" நீண்ட நாள் மருந்தினால் போகாத நோய் கூட --- குண்டலினி யோகத்தில் - 'துரியாதீத தவத்தால்' போகும்".



" நீண்ட நாள் மருந்தினால் போகாத நோய் கூட
-------------------------------------------------------------------------
குண்டலினி யோகத்தில் - 'துரியாதீத தவத்தால்' போகும்".
------------------------------------------------------------------------------------------


.
"ஜீவகாந்தத்தின் விளைவுதான் மனம். மனம் தன் மூலத்தை அறிவதற்காகவே, அடைவதற்காகவே, விரிகிறது. விரிந்து விரிந்து நிற்கிறது. அனுபோக உணர்ச்சிகளில் இருக்கும் மனதிற்கு வழி தெரியவில்லை; வேகமோ குறையவில்லை; ஆகவே எங்கெங்கோ சென்று நிற்கிறது. எது எதிலேயோ சிக்கிக் கொள்கிறது, துன்புறுகிறது. ஆனால், தன் லட்சியத்தை அடையும் வரை மனதின் விரியும் முயற்சி சோர்வடைவதில்லை. மெய்ப்பொருளை உணர்ந்த பிறகுதான் மனதிற்கு அமைதி கிட்டுகிறது. அதுவரை அமைதி கிடைப்பதேயில்லை.

.
தன் மூலத்தை (ஆதி நிலை) அறிய எழுந்த வேகம் திசை தப்பி நிற்கும் அளவிற்கு அமைதியின்மையின் அளவும், துன்பத்தின் அளவும் இருக்கும். பிராயச்சித்தம், மேல்பதிவு, தேய்த்தழித்தல் (Expiation, Superimposition and Dissolution ) என்று கருமப் பதிவுகளைப் (Sins and Imprints) போக்கிக் கொள்ள மூன்று வழிகள் இருப்பதை நான் பலமுறை விளக்கியுள்ளேன்.

.
அவற்றில் கடைசியான தேயத்தழித்தல் ( Dissolution ) என்பது தவத்தினால் ( Simplified Kundalini Yoga ) தான் சாத்தியமாகும்.

.
ஆக்கினைத் தவத்தினால் ஆகாமிய கர்மம் போகும்.

.
துரியநிலைத் தவத்தில் ஆகாமிய கர்மமும், பிராரப்த கர்மமும் போகும்.

.
துரியாதீத தவத்தில் ஆகாமிய கர்மமும், பிராரப்த கர்மமும், சஞ்சித கர்மம் ஆகிய மூன்றுமே போகும்.

.
நீண்ட நாள் மருந்தினால் போகாத நோய் கூடத் 'துரியாதீத தவத்தால்' போகும். 'துரியாதீத தவம்' ஒரு மாபெரும் புதையல். இதில் எல்லாமே அடக்கம். எந்த அதிர்வியக்கத்தில் ( Mind frequency) மனம் நின்றால் பிரபஞ்ச ரகசியம் எல்லாம் அறியப்படுமோ அந்த இடந்தான் சமாதிநிலை" (ஆதி நிலை). துரியாதீத தவத்தால் இந்நிலையில் நிலைத்து பழக்க, அறிவு அமைதியைப் பெறுகிறது.

.
துரியாதீதம் :
------------------

"தூயப் பெருநிலை துரியாதீதமோ
துயர், மகிழ் விரண்டையே துய்த்த என் அறிவை
காலம், பருமன், தூரம் விரைவெனும்
கணக்கினைக் கடந்து மெய்ப்பொருளோடு இணைத்தது;
இனிப் பழிபுரியேன் புரிந்தவை களைந்தேன்
இறைநிலை உணர்ந்தேன் இணைந்தேன் நிறைந்தேன் ;
இனி என் உடல் உயிர் ஆற்றலை முறைப்படி
இயக்கிக் கடமையை புரிவேன்."

.
சமாதி நிலை :
-------------------

"உடலியக்கம் நின்றுவிட்ட சவத்தை மண்ணில்
உள்புதைத்து சமாதி என்று பூஜை செய்து
உடலியக்கம்பெற்ற பல பொருள் அழித்து
உள அமைதியை இழந்து சோர்ந்தோரேனும்;
உடலியக்கம் அறிவியக்கம் பிறப்பு இறப்பு
உண்மைகளையறிந்து பயன் அடைய வென்றால்
உடலியக்கம் நிற்கும் முன்னே கருதவத்தால்
உள்நாடி சமாதி நிலையறிய வாரீர் ! "

.
வாழ்க வையகம் வாழ்க வளமுடன்.

- தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி.