Tuesday, August 18, 2015

பேரறிவு :



இருப்புநிலை, சூன்யம், ஒன்றுமில்லாதது என்று பலரும் எண்ணுகின்றனர். இது தவறானது. இருப்புநிலை எல்லாவற்றையும் தன்னுள் பெற்றுள்ளது. அனைத்து பொருளும் இங்கிருந்து தான் ஆரம்பிக்கின்றது. இதனுள் இயங்குகின்றது. இருப்புநிலையை கடல் என்று நாம் எண்ணினால் பிரபஞ்சத்தில் உள்ள மிகச்சிறிய பொருள்களிலிருந்து மிகப் பெரிய பொருள் வரை அதன் இயக்கங்கள், சக்திகள் அனைத்தும் கடலில் தோன்றுகின்ற அலைகளாகும். அலைகள் கடலில் தோன்றி, கடலின்மேல் அசைந்து, கடலில் முடிவடைகின்றது. அதே போன்று மிகச்சிறிய பொருளிலிருந்து மிகப் பெரிய சூரியன் வரை உள்ள அனைத்து பொருள்களும், உயிர்வாழும் ஜீவன்களும் இருப்புநிலையிலிருந்து (Static State) தோன்றி, அதனுள் இயங்கி, அதனுள்ளே முடிவடைகின்றது.

நீக்கமற நிறைந்துள்ள பூரணத்தில் பிரபஞ்சத்தில் உள்ள அனைத்தும் இருப்பு நிலையில் மிதக்கின்றன. அசைகின்றன. தண்ணீரில் அதன் நுரை மிக நின்றாகத் தெரியும். நீரில் நுரை மிதப்பதைப் போன்று அனைத்துப் பொருள்களும் பூரணத்தில் மிதந்து கொண்டு உள்ளன. எண்ணிப் பாருங்கள். ஒரு பொருள், அதன்மேல் மற்றொரு பொருள் இதில் எது சக்திவாய்ந்தது. அசைகின்ற ஒவ்வொரு பொருளையும் தன்னிடம் பிடித்துக் கொண்டிருப்பது இருப்புநிலை. பிரபஞ்சம் முழுதும் பூரணத்தில் அடங்கியுள்ளது. பூரணத்தில் மிதந்து கொண்டும் இயங்கிக் கொண்டும் இருக்கிறது. சுற்றிலும் சூழ்ந்துள்ள இருப்புநிலையின் அழுத்தத்தால் பிரபஞ்சத்தில் உள்ள ஒவ்வொரு துகளும் தற்சுழற்சி வேகத்துடன் இயங்கிக் கொண்டுள்ளது. பொருள்களின் தன்மைக்கேற்ப பிரபஞ்சம் முழுதும் வெவ்வேறு வேகத்துடன் அவைகள் இயங்கிக் கொண்டுள்ளது. இருப்புநிலையே எல்லாம் வல்லது, அதுவே ஆதிநிலை.
- தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி.
வாழ்க வையகம் வாழ்க வளமுடன்

ஆசையின் மயக்கம் :

தேவையைக் காரணமாகக் கொண்டு எழுந்த ஆசை தேவை நிறைவோடு நின்றுவிட வேண்டும். பசி தாகம் முதலிய இயற்கைத் துன்பத்தைப் போக்கிக் கொள்ள எழுந்த ஆசை துன்பத்தைப் போக்குவதோடு நின்றாக வேண்டும். உயிராற்றல் செலவைச் சரி செய்ய எழுந்த ஆசை அப்படிச் சரி செய்வதோடு நின்றாக வேண்டும். ஆனால் பொதுவாக அப்படி நிற்பதில்லை.
.
ஆசையின் மயக்க நிலை :
தேவை நிறைவின் போது ஏற்பட்ட திருப்தியின் மீது அல்லது இன்பத்தின் மீது உயிர் மயங்கிவிடுகிறது. எந்தக் காரியம் இன்பத்தைத் தந்ததோ, அந்தக் காரியத்தைத் தேவையில்லாமலே செய்ய விழைகிறது. அதாவது உண்மையான தேவை இல்லாமலேயே ஆசை எழுகிறது. எழுகிற துன்பத்தைத் தீர்க்கும் வகையில் ஆசை தோன்றியது போக, இன்பத்தைச் செயற்கையாகத் தேடும் முயற்சியிலே இப்போது ஆசை எழுகிறது. இந்த ஆசையைத் தான் கட்டுப்படுத்த வேண்டும். எழாமலேயே காக்கவும் வேண்டும்.
.
உயிராற்றல் குறைவை நிறைவு செய்வதற்காக அல்லாமல், இயற்கைத் துன்பத்தைத் தீர்ப்பதற்காக அல்லாமல்,உண்மையான உயர்வான தேவையின் காரணமாக அல்லாமல் ஏற்படும் ஆசைகளெல்லாம் அறிவின் மயக்கத்தால் தோன்றுவன. அவை துன்பத்தைத்தான் தரும்.
.
இன்னொன்று, தகுந்த காரணத்தாலேயே ஏற்பட்ட இச்சைகளானாலும், அவ்வாசைகளை நிறைவு செய்யும் முயற்சியில் தனக்கோ பிறர்க்கோ துன்பம் தோன்றுமானால், அவ்வாசைகளும் தடுக்கப்பட வேண்டியவையே. மேலும், நிறைவேறிய பின்னர் தீய விளைவுகளைத் தரக்கூடிய இச்சைகளையும் கட்டுப்படுத்தித் தான் ஆக வேண்டும்.
.
வாழ்க வையகம் வாழ்க வளமுடன்.
- தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி

மனவளக்கலை ஒரு பெட்டகம் :

தான் உயரவும், பிறரையும் உயர்த்தவும் ஏற்ற பயிற்சியும், தொண்டும், இரண்டும் மனவளக்கலையில் அடங்கியுள்ளன.
.
இரண்டு வேலையும் ஆக்கினை, துரியம், சாந்தியோகம் தவறாமல் தவமியற்றி வாருங்கள். மன அமைதி அறிவுக்கூர்மை, அறிவின் ஓர்மை, மன உறுதி இவை உண்டாகும்.
.
தற்சோதனையில் எண்ணங்களை ஆராயுங்கள். விழிப்பு நிலையில் அறிவு செயல்படும். நலம், தீது உணர் ஆற்றல் உண்டாகும். வேண்டாப் பதிவுகளை - வினைபதிவுகளை மாற்றி விடலாம்.
.
ஆசைச் சீரமைப்பு பயிற்சி செய்யுங்கள். உடல் நலம்; மனவளம், பொருள் வளம், நற்புகழ், நிறைவு இவை பெருகும். அமைதியுண்டாம்.
.
சினம் தவிர்ப்பு பழகுங்கள். குடும்பம், நண்பர்கள், தொழில் செய்யுமிடத்திலுள்ளோர், உற்றார் உறவினர் இவர்களிடம் உங்கள் அன்பு, நட்பு, இவைபெருகும். இனிமையும் மகிழ்ச்சியும் உண்டாகும்.
.
கவலை ஒழிப்பு பழகுங்கள். அச்சமின்மை, மெய்யுணர்வு, உடல் நலம், மனநிறைவு இவையுண்டாகும்.
.
நான் யார் என்ற ஆராய்ச்சியில் தெளிவு பெறுங்கள். பேரியக்க மண்டலம், தோற்றம், இயக்கம், விளைவு அணைத்து மறை பொருட்களும், மனம், உயிர், மெய்ப் பொருள் உணர்வு உண்டாம்.
.
இவ்வளவு பயிற்சியும் பழக்கமும் இணைந்த ஒரு வாழ்க்கை நலக்கல்வியே "மனவளக் கலை" யாகும். இக்கலையை எளிய முறையில் கற்கும் பேறு பெற்றிருக்கீர்கள். இக்கலையின் மாண்புணர்ந்து பழகி நலம் பெற்று மனதில் நிறைவு பெறுங்கள். மனநிறைவைப் பெற்றுவிட்டால் அறிவு மேலும் உயர்ந்து சிறந்து விளங்கும். பிறவியின் நோக்கம் வெற்றி பெறும். இத்தகைய உயர் வாழ்வுக்கு ஏற்ற ஒரு பெட்டகம் மனவளக்கலை.
புத்தாண்டு வாழ்த்துக்கள்.
.
- தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி.
வாழ்க வையகம் வாழ்க வளமுடன்.