Tuesday, July 8, 2014

கருமையம் தூய்மையாக இருக்கட்டும்:


வாழ்க வையகம் வாழ்க வளமுடன்

கருமையம் தூய்மையாக இருக்கட்டும்:

உடலுக்கு மூலப் பொருள் வித்து
உயிருக்கு முக்கியப் பொருள் விண்துகள்கள்
மனதுக்கு மூலப் பொருள் சீவகாந்தம்.

இவை மூன்றும் மையம் கொண்டிருப்பது உடலுக்கு மையமான பகுதியாகிய மூலாதாரம். மூலாதாரம் என்பது மனித உடலுக்கு கருமையம்.

கருமையம் தான் மனிதனின் பெருநிதி; செயலுக்கேற்ற விளைவைத் தரும் தெய்வீக நீதிமன்றம். பிறப்பிற்கும் இறப்பிற்கும், தொடர் பிறப்புகள் பலவற்றுக்கும் இடையே வினைப்பதிவு பெட்டகமாக தொடர்ந்து வரும் மாயத்துணைவன்; தெய்வத்தையும், மனிதனையும் இணைத்துக் காட்டும் அறிவின் பேரின்பக்களம்.

இத்தகைய பெருமை வாய்ந்த கருமையத்தைத் தூய்மையாக வைத்துக் கொள்வதற்கான வழிமுறைகள்.

1) பெற்றவர்கள், குரு, ஆட்சித்தலைவர், தெய்வம் இவர்களை மதித்து வாழ்தல்.

2) ஒழுக்கம் கடமை ஈகை மூன்றும் இணைந்த அறநெறியை பின்பற்றுதல்.

3) அகத்தவப் பயிற்சியை முறையாகச் செய்து வருதல்.

4) இரத்தம், காற்று, உயிர், சீவகாந்தம் இவை தடையின்றி ஓடி உடலைக் காத்துக் கொள்ள ஏற்ற உடற்பயிற்சிகளை அளவோடு செய்து வருதல்.

5) பெற்றோர்கள், வாழ்க்கைத் துணைவர், பெற்ற குழந்தைகள் இவர்களை பொறுப்போடும் அக்கரையோடும் காத்து உதவி வருதல்.

6) இறைநிலை உணர்ந்து அந்நிலையோடு அடிக்கடி ஒன்றி பழகுதல்.

7) மனித முயற்சியால் உற்பத்தி செய்த பொருட்களையும் இயற்கை வளத்தையும், பிறர் உபயோகிக்கும் பொருட்களையும் சேதப்படுத்தாது மதித்து நடத்தல்.

8) நாம் பார்க்கும் ஒவ்வொரு உடலும் இயற்கை என்ற பேராற்றலால் கட்டப்பட்டிருக்கும் பெருமையை உணர்ந்து உடலுக்குள் அறிவாக விளங்குவது தெய்வத்தின் ஒளியே என்று மதித்து ஒத்தும் உதவியும் வாழ்ந்து வருதல்.

9) உள்ளத்தில் பகை வஞ்சம் எதையும் வைத்துக் கொள்ளாமல் மன்னிப்பும், கருணையும் கொண்டு எல்லோருடனும் இன்முகத்தோடும் அன்போடும் பழகுதல்.

10) தேசம், மதம், சாதி, இனம், மொழி இவற்றால் மனிதரை வேறுபடுத்திக் காணாமல் எல்லோரும் இயற்கையின் மக்கள் என்ற நினைவில் வாழ்தல்.
- தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி.
வாழ்க வையகம் வாழ்க வளமுடன்

No comments:

Post a Comment