Tuesday, May 13, 2014


மெளனம்

நாம் கருத்தொடராகப் பெற்ற வினைப் பதிவுகளையும், பிறவி எடுத்த பின் ஆற்றிப் பெற்ற வினைப் பதிவுகளையும் தன்மைகளாகப் பெற்றவர்களாவோம். நம் வினைப்பதிவுகள் அனைத்தும் புதையல் போல உயிர் எனும் இயற்கை கம்ப்யூட்டரில் அடங்கியுள்ளன. காலத்தால் மலரும் அப்பதிவுகளின் வெளிப்பாடுகளே எண்ணங்கள், செயலார்வம், நோய்கள், இன்ப துன்பங்கள் யாவுமாகும்.

ஒரு தொழிலதிபர் அல்லது வணிகர் மாதந்தோறும் அல்லது ஆண்டுதோறும் இருப்பிலுள்ள பொருள்களைக் கணக்கெடுப்பது போல எல்லோருமே மாதத்திற்கு ஒரு நாளோ அல்லது ஆண்டுக்குச் சில நாட்களோ ஒதுங்கிக் கொண்டு நம் இருப்பைக் கணக்கெடுக்க மெளன நோன்பு அவசியம்.

இந்தக் கருத்தோடு, தவத்தால் அறிவை அமைதிக்கும், கூர்மைக்கும் கொண்டு வந்து, அகத்தாய்வால் நமது இருப்புகளைக் கணக்கெடுத்து, புதிய திட்டத்தால் ஆக்க வாழ்வுக்கு வழி செய்து கொள்ள வேண்டும். மெளன நோன்பின் உண்மை நோக்கமறிந்து விழிப்புடன் காலத்தைப் பயன்படுத்தி, ஆன்மத் தூய்மையும், வாழ்வின் வளமும் பெறுவோம். தான், குடும்பம், உற்றார், ஊர், உலகம் என்ற ஐந்து பிரிவுகளையும் பல தடவை வாழ்த்தி அமைதி காண்போம்.

மோனநிலையின் பெருமை யார் எவர்க்கு
முன்படர்ந்து வாயாலே சொல்லக்கூடும்?
மோனமே அறிவினது அடித்தளம் ஆம்;
மிகவிரிவு! எல்லையில்லை! காலம் இல்லை!

மோனத்தின் அறிவு தோய்ந்து பிறந்தால்,
முன்வினையும் பின்வினையும் நீக்கக் கற்கும்;
மோனநிலை மறவாது கடமை ஆற்ற,
மென்மை, இன்பம், நிறைவு, வெற்றி அமைதியுண்டாம்.
+ ஞானக் களஞ்சியம், (பாடல்:1640)

மோனமும் எண்ணமும்
மோனத்தில் வாய்மூட எண்ணாம் தோன்றும்
முனைந்தவன் யார் ? முடிவு எங்கே வளர்த்தாராய்
மோனநிலை திரிந்ததனால் எண்ணமாக
முனைந்துள்ளேன் யான் அன்றிப் பிற அங்கில்லை
மோனமும் பின் எண்ணமுமாய் மாறி மாற
முன்னது மெய் பின்னது உயிர் என விளங்கும்
மோனம் உயிர் மனம் மூன்றும் ஒன்றாய்க்காண
மோனத்தவம் கற்றாற்றி முனைப்பு ஒழிப்பீர்

விளக்கமும் பழக்கமும்
பேசா நோன் பாற்றுங்கால் அறிவு தன்னை
பழக்கங்கள் எவ்வாறு வலுவாய்மோதி
பேசா நோன்பைக் கலைத்துப் பேச வைக்கப்
பெரும் போரை நடத்துகின்றதென உணர்வோம்
பேசா நோன்பு இயற்கைக்கும் உயிர்க்கும் உள்ள
பிணைப்பை நன்குணர்ந்திட ஓர் நல்வாய்பாகும்
பேசா நோன்பென்பது வாய் மூடல் அல்ல
பெரியமறை பொருள் மனதை அறியும் ஆய்வே

+ வேதாத்திரி மகரிஷி

No comments:

Post a Comment