Monday, April 25, 2016

திருமூலர் கவிக்கு மகரிஷியின் விளக்கம்:


திருமூலர் கவிக்கு மகரிஷியின் விளக்கம்:
-------------------------------------------------------------

"திளைக்கும் வினைக்கடல்
தீர்வுறு தோணி
இளைப்பினை நீக்க
இருவழி உண்டு
கிளைக்கும் தனக்கும் அக்
கேடில் முதல்வன்
விளைக்கும் தவம் அறம்
மேற்றுணை யாமே "
.


"திளைக்கும் வினைக்கடல் என்றால் என்ன? ஒவ்வொருவரும் வினைக் கடலாகத்தான் இருக்கிறோம். இதுவரை செய்த செயலின் தொகுப்பே மனிதன். தீயவினைப் பதிவுகள் அவ்வப்போது வாழ்வில் துன்பங்களை உண்டு பண்ணிக் கொண்டே இருக்கின்றன. ஆகவே, இந்தக் கடலைக் கடப்பதற்காகவே வாழ்க்கை என்ற தோணியில் போய்க் கொண்டுள்ளோம். ஆனால் அதைக் கடக்க முடியாமல் சோர்வுறுகிறோம்.
.

கிளைக்கும் என்றால் இவனுக்குப் பின்னால் வரும் சந்ததிகளுக்கும் என்று எடுத்துக் கொள்ளவேண்டும். நமது சந்ததியினரும் கூட நன்மையே பெற வேண்டுமானால் தவமும், அறமும் வேண்டும். தவம் என்றால் இறைநிலை உணருவதற்காகச் செய்யக் கூடிய அகத்தவப் பயிற்சி (Simplified Kundalini Yoga). அதாவது உளப்பயிற்சி (Meditation). அறம் என்றால் முயற்சியையும், செயல்களையும் தனக்கும் பிறர்க்கும் எக்காலத்திற்கும் துன்பமின்றி நலமே விளைப்பனவாக மாற்றும் பயிற்சி. ஆகவே "தவம்", "அறம்" என்ற இரண்டு வழிகள் தான் மனிதனை உய்விப்பதர்கான வழி என்பது திருமூலர் வாக்கு."
.

வாழ்க வையகம் வாழ்க வளமுடன்.

தவமும் அறமும் :



ஏப்ரல் 22 : வாழ்க வையகம் வாழ்க வளமுடன்.

தவமும் அறமும் :
.......................................


"தவத்தையும் அறத்தையும் நீங்கள் மிகச் சுலபமாகப் பற்றிச் செல்லும் முறையினை இப்போது உங்களுக்குச் சொல்லுகின்றேன். தவம் எதற்காக என்றால் இறையுணர்வு பெற்று இறைவனோடு உறைவதற்காக. அறம் எதற்காக என்றால் இது வரையில் செய்த கர்மங்களின் அழுத்தத்தினால் எண்ணமும் செயலும் தோன்றிக் கொண்டே இருக்கின்றனவே, அதிலிருந்து செய்து செய்து நல்லனவே செய்யக்கூடிய அளவுக்கு, தீயன செய்யாது இருக்கக்கூடிய ஒரு தூய்மைக்கு வரவேண்டும். மனத்தூய்மை தவத்தினால் வரும்; வினைத்தூய்மை செயலினால் வரும்; நல்ல செயல் அறத்தினால் வரும். அதனால் இது வேண்டும். இந்த இரண்டையும் ஒருங்கே பார்ப்பதற்கு என்ன வேண்டும்? இந்தக் காலத்திற்கு வேண்டியது அதுதான். அந்த அறம், தவம் இவற்றை வைத்துத்தான் இதுவரையில் இந்த உலகத்திலே ஏற்பட்ட மதங்களெல்லாம் அமைந்துள்ளன.
.

எந்த மதத்தை எடுத்துக் கொண்டாலும் இறை - உணர்வைக்காட்டி அற - உணர்வை காட்டிடுவதாகவே இருக்கும். இந்த இரண்டும் தான் எல்லா மதங்களிலும் உள்ளன. இறை உணர்வுக்கு இறைவழிபாடு. உலக மக்களோடு தொடர்பு கொண்டு இனிமையாக - அதாவது ஆங்கிலத்தில் "harmony" என்று சொல்கின்றோமே அவ்வாறு - வாழ்வதற்கு என்ன வேண்டும்? ஒழுக்கம், கடமை ஈகை என்ற அறம் வேண்டும். இந்த அறநெறி உலக வாழ்க்கைக்கு அவசியம். தவநெறி, உளப்பயிற்சி, அறிவு மேன்மை இறைவனை அடைய இவை வேண்டும். இதுவரையில் மதங்களிலெல்லாம் அந்த உணர்வை ஏற்படுத்துவதற்காக இதெல்லாம் சொன்னார்கள்."
.

வாழ்க வையகம் வாழ்க வளமுடன்.

- தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி.
.

* * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * *
.

"அறிவு என்பது அறியப்படுவது.
ஞானம் என்பது உணரப்படுவது".
.

"அறிவை ஏடுகளில் பெறலாம்.
ஞானத்தை தவத்தால் பெறலாம்".
.

"அறிவேதான் தெய்வமென்றார் தாயுமானார்
அகத்ததுதான் மெய்ப்பொருள் என்றெடுத்துக்காட்டி
அறிவதனை அறிவித்தார் திருவள்ளுவர்.
அவ்வறிவை அறிவதற்கு முறைகள் சொன்னார்
அறிஞர் திருமூலர்; அவ்வறிவில் ஆழ்ந்து
ஆனந்தக் கவியாத்தார் இராமலிங்கர்;
அறிவில் அறிவாய் நிலைத்து அறம்வகுத்தோர்,
அதை வாழ்ந்து காட்டினோர் நினைவு கூர்வோம்".
.

- தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி.

தொண்டாற்ற முனைந்து நில்லுங்கள் :



ஏப்ரல் 24 : வாழ்க வையகம் வாழ்க வளமுடன்.

தொண்டாற்ற முனைந்து நில்லுங்கள் :
................................................................................


"நாம் நமது வாழ்வைச் சிக்கலில்லாமல் இனிமையாக அமைத்துக் கொள்ள வேண்டுமானால் உடலை நலமுடன் வைத்துக் கொள்ளவும் மனதைத் தெளிவாக வைத்துக் கொள்ளவும் வேண்டும். மனக்கனங்கள் அனைத்தும் தன்முனைப்பிலிருந்து தான் உண்டாகின்றன. பேரியக்க மண்டல விரிவாக அமைந்து இயங்கும் அருட்பேராற்றலால் ஒவ்வொரு தோற்றமும் வளர்ச்சியும், நீடிப்பும், முடிவும் நடைபெறுகின்றன. மனிதனும் அவ்வாறே!
.

பெற்றவர்கள், தாய் தந்தையர் சமுதாயத்தின் எண்ணிறந்த மக்களுடைய உழைப்பால் விளைந்த பொருட்களைக் கொண்டே ஒருவன் வளர்கிறான், வாழ்கிறான். கல்வி, தொழில், செல்வாக்கு இவற்றை சமுதாயம் அளிக்கின்றது. எனவே தனி மனிதன் எதைக் கொண்டு தன்முனைப்புக் கொள்வது? இவ்வுண்மையினை உணர்வதோடு, மறவாமல் நினைவுகொள்வதால் தன்முனைப்பு என்ற மயக்கப் புகையில் சிக்காமல் மனிதன் தன்னைக் காத்துக் கொள்ள முடியும். தன்முனைப்புத் திரை நீங்கினால் அறுகுணங்களும் பொறாமை, கடும்சொல், பகைமை இவையும் எழ இடமில்லை.
.

இந்த மனோநிலையில் தான் மனிதனின் மனம் தூய்மையாக இருக்க முடியும். இத்தகைய உண்மை விளக்கம் பெறவும் அந்த விளக்கத்தின் ஒளியில் வாழ்வை சீரமைத்துக் கொண்டு உடல் நலத்துடனும், பொருள் வளத்துடனும் சிறப்பாக வாழவும் வழி செய்வது குண்டலினியோக முறை. இந்தப் பெருமை வாய்ந்த யோகத்தின் நான்கு கூறுகளாகிய தவம், தற்சோதனை, குணசீரமைப்பு, அறிவின் முழுமைப்பேறு இவற்றை செம்மையாகப் பயின்று சிறப்பாக வாழும் நீங்கள் எல்லோரும் இந்தச் செந்நெறியின் பெருமையை உங்கள் அறவாழ்வின் மூலம் உலகுக்கு உணர்த்துங்கள். எல்லா வளமும் ஓங்கிய உலகுக்கு உள்ள ஒரு குறைபாடு ஆன்மீக விளக்கம் இன்மை. இதனை முழுமை செய்து மனித குலத்துக்குத் தொண்டாற்ற நீங்கள் ஒவ்வொருவரும் முனைந்து நில்லுங்கள்."
.

வாழ்க வையகம் வாழ்க வளமுடன்.

- தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி.
.

* * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * *
.

"மனிதனிடம் ஏற்பட்டுள்ள களங்கங்கள் பாவப்பதிவுகள்
நீங்கினால் தான் உயிருக்கு வீடுபேறு".
.

முக்களங்கங்களிலிருந்து விடுதலை:

"முன் முனைப்பு, பின் முனைப்பு இரண்டால் ஏற்ற
முக்களங்கம் எவையென்றால் மெய்ம்மறந்த
தன்முனைப்பு, பழிச் செயல்கள், பொருள் மயக்கம் -
தளை மூன்றாம் இவை களைந்து உய்யவென்றால்
உன் முனைப்பு குறைத்திட்டு உள்ளுள் நாடும்
உயிர்த் தவமும் அறநெறியும் சிறந்த பாதை
நன் முனைப்பாய் உயிர்நாட்டம் திரும்பி விட்டால்
நாள்தோறும் விடுதலையின் இனிமை காண்பாய்".
.

தொண்டில் உயர்வு தாழ்வு வேண்டாம் :

அருள்துறையில் சத் சங்கம் நடை பெறுவதென்றால்
அவரவர்கள் இயன்றவரை தொண்டாற்ற வேண்டும்,
பொருளுடையோர் பொருள் தரலாம் அவர் விரும்பும் அளவில்,
பொதுச் சொத்தே அருள்நாட்டம் கொண்டவர்கட் கெல்லாம்;
அருள் மனத்தால் ஒருவர் பிறரை அடக்கி ஆளும்
ஏற்றத்தாழ் வெதுவும் சத் சங்கங்கட் கொவ்வா;
உருள்உலகில் உருண்ட சங்கம் ஆயிரமாயிரமாம்
உட்பகையால்; உண்மை கண்டு நல்லனவே செய்வோம்.
.

- தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி.

தெய்வீகத் திருநிதி :


ஏப்ரல் 25 : வாழ்க வையகம் வாழ்க வளமுடன்.
தெய்வீகத் திருநிதி :
----------------------------

"பிறப்புக்கும், வாழ்வுக்கும், இறப்புக்கும் இயக்க நிலையமாக உள்ளது கருமையம். காந்தச் சுழலின் மைய ஈர்ப்பு, உயிரியக்கமான சூக்கும உடலின் இயக்க மையம், விந்து நாதக் குழம்பின் இருப்பு மையம், மூன்றும் ஒன்று கூடிய வியக்கத்தக்க ஓர் உயிரின மறைபொருள் புதையல் தான் எந்த உயிரினத்திற்கும் மையப் பகுதியில் அமைந்துள்ள கருமையம் ஆகும். இந்தக் கருமையம் தான் (Soul) ஆன்மா, சீவன், அகம், உள்ளம், உயிரினக் கருவூலம், நெஞ்சம் என்ற சொற்களால் வழங்கப் பெறுகின்றது. கருமையத்தில் அடங்கியுள்ள ஆற்றலையும் அதன் மதிப்பையும் எவராலும் மொழியைக் கொண்டு உணர்த்திவிட முடியாது. உதாரணம், மனிதனுடைய கருமையத்தில், இறைநிலையின் பரிணாமம், இயல்பூக்கம் எனும் முறையான நிகழ்ச்சிகளால் இறை நிலையிலிருந்து தொடங்கி இன்று வரையில் நிகழ்ந்த அத்தனையும் தன்மை வாய்ந்த காந்த அலைத் திவலைகளாகச் சுருங்கி அமைந்துள்ளன.
.

தக்க காலத்தில் தேவையாலும், மன இயக்க நிலையாலும், சூழ்நிலைகளாலும் கருமையத்துல் சுருங்கியிருக்கும் அனைத்தும் ஒவ்வொன்றாக எண்ணங்களாகவும், செயல்களாகவும், உருவங்களாகவும் வெளிப்படும். இத்தகைய பேராற்றல் அமைந்த தெய்வீகத் திருவிளையாட்டின் சூட்சும அரங்கமே கருமையம் ஆகும். இத்தகைய கருமையத்தில், காலம், தூரம், பருமன், இயக்கம் என்ற நான்கு கணக்குகளுக்கும் எட்டாத இறைநிலையிலிருந்து, இன்று நாம் காணும் விரிந்த பேரியக்க மண்டலத்தில் நிகழும் கோடான கோடி இயக்கங்களையும் பிரதிபலிக்கும் காந்தக் கண்ணாடியாகவும் விளங்கும் தெய்வீகத் திருநிதியே கருமையம் ஆகும்."
.

வாழ்க வையகம் வாழ்க வளமுடன்.

- தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி.
.

* * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * *
.

"உயிருக்கு உதவி செய்வது என்பது ஈகை,
உயிருக்கு ஊறு செய்யாமை என்பது ஒழுக்கம்".
.

"எண்ணத்தில் எண்ணமாய் இருப்பதே யோகம்."
.

"எண்ணத்தை எண்ணத்தால் ஆராய்ந்தால்
எண்ணத்தின் இருப்பிடமும் இயல்பும் தோன்றும்;
எழும் எண்ணம் யாவும் நற்பயனாய் மாறும்".
.

கருமையத் தூய்மை கவிகள் :

நிறைவுபெறா மல்இருக்கும் ஆசைகளின் கூட்டம்,
நெஞ்சம்மனம் பேச்சுஇடை பிணக்காகும் பொய்கள்,
மறைமுகமாய் நேர்முகமாய்ப் பிறர்உளம்வருத்தல்,
மற்றஉயிர் சுதந்திரமும் வாழ்வின்வளம் பறித்தல்,
நிறைவழிக்கும் பொறாமை, சினம், பகைவஞ்சம் காத்தல்,
நெறிபிறழ்ந்த உணவுழைப்பு உறக்கம்உட லுறவு,
கறைபடுத்தும் எண்ணம் இவை கருமையம் தன்னைக்
களங்கப்ப டுத்திவிடும் கருத்தொடுசீர் செய்வோம்.
.

"பலஆயி ரம்பிறவி எடுத்துஏற்ற பாவப்
பதிவுகளை ஒருபிறவிக் காலத்தில் மாற்றி,
நலமடைந்து மனிதனாகித் தெய்வமாகி உய்ய,
நல்வாய்ப்பு ஆற்றல்இவை கருணையோடு இயற்கை
நிலஉலகில் மனிதரிடம் அமைத்துளது உண்மை.
நேர்முகமாய்க் கருமையத் தூய்மைஉணர்ந் தாற்றி,
பலனடைய அகத்தவத்தால் பரமுணர்ந்து, அறத்தின்
பாதையிலே ஒத்துதவி வாழும்முறை போதும்!".
.

- தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி.