Tuesday, April 7, 2015

விஞ்ஞானம், மெய்ஞ்ஞானம் :



விஞ்ஞானம், மெய்ஞ்ஞானம் :

உருவம், ஒலி, ஒளி, சுவை, மணம் எனும் ஐந்து விளைவுகளுக்கும் மூலமானதும், மெய்ப்பொருளானதும், காலம், தூரம், பருமன், வேகம் எனும் கணிப்புக்கு அப்பாற்பட்டதும் ஆகிய மெய்ப்பொருளினைப் பற்றியும், ஐயுணர்வுகளாகவும் சிந்தனை ஆற்றலாகவும் உள்ள அறிவைப் பற்றியும் உணர்ந்து கொள்ளும் தெளிவு மெய்ஞ்ஞானம். இயக்கத்தைக் கண்டது விஞ்ஞானம். இயக்க மூலத்தை உணர்ந்தது மெய்ஞ்ஞானம். உடலை வளர்ப்பதும் அதை அழகுபடுத்துவதும் விஞ்ஞானம். உள்ளத்தை மேன்மையாக்குவதும், தூய்மையாக்குவதும் மெய்ஞ்ஞானம். வாழ்வில் சிறப்பளிப்பது விஞ்ஞானம். வாழ்வில் அமைதி தருவது மெய்ஞ்ஞானம். இயங்கி அறிவது விஞ்ஞானம். நிலைத்து உணர்வது மெய்ஞ்ஞானம். வாழ்வின் முன்னேற்றம் "விஞ்ஞானம்" வாழ்வின் சீர்திருத்தம் "மெய்ஞ்ஞானம்".

வாழ்வை வளப்படுத்தும் ஒரு உயர்நிதி விஞ்ஞானம். அந்த நிதியைப் பாதுகாக்கும் பெட்டகம் மெய்ஞ்ஞானம். துணைக்கருவிகளைக் கொண்டு உடல் கருவிகளை ஆற்றல்களைப் பெருக்கிவருகிறது விஞ்ஞானம். உடற்கருவிகளை திறமையோடு ஆற்ற அறிவை முழுமையாக்குகிறது மெய்ஞ்ஞானம். மனிதனுக்கு களிப்பூட்டவல்லது விஞ்ஞானம். அக்களிப்பு சலிப்பாக மாறாமல் அளவு கட்டிக்காவல் புரியவள்ளது மெய்ஞ்ஞானம். மெய்ஞ்ஞானத்தோடு இணைந்த விஞ்ஞானம் வாழ்வின் நலம்காக்கும். மெய்ஞ்ஞானத்தைப் புறக்கணித்த விஞ்ஞானம் வாழ்வின் வளமழிக்கும். மறைபொருள் விளக்கம்தான் மெய்ஞ்ஞானம். உருப்பொருள் விளக்கம் தான் விஞ்ஞானம். அறிவைப் பற்றி, உயிரைப் பற்றி, உயிருக்கும் மூலமெய்ப்பொருளைப் பற்றி அறிந்து கொள்வது மெய்ஞ்ஞானம். உடலைப் பற்றி, உலகைப் பற்றி அறிந்து கொள்வது விஞ்ஞானம். அறிவின் சிறப்பு மெய்ஞ்ஞானம்.

வாழ்க வையகம் வாழ்க வளமுடன்.

- தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி.
.

* * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * *
.

"விஞ்ஞானம் விளக்கைப் போல் இயற்கையில் நிகழ்ந்திடும்
விந்தைகளை மக்களுக்கு வெளிப்படுத்தும் ஒளியென்றால்;
மெய்ஞ்ஞானம் சூரியன் போல் எங்கும் எக்காலத்தும்
மேல் நிலையை அறிவெய்த மிகச் சிறந்த ஒளியாகும்".
.

"அஞ்ஞானம் அறிவினது ஆரம்ப நிலையாகும்.
விஞ்ஞானமோ அறிவின் வேகநிலை,
மெய்ஞ்ஞானம் அறிவதனின் பூரணமாம்,
இஞ்ஞானம் மூன்றும் இயற்கையின் எண்ண நிலை".
.

"விஞ்ஞானம் சிறப்புற்று விண் வெளியுணரப் பெற்றால்
அஞ்ஞானம் மறைந்து விடும் அன்பும் அருளும் பொங்கி
மெய்ஞ்ஞானம் ஒளி வீசும் மெய் உயிர் அறிவறிவு
இஞ்ஞால முழுமைக்கும் ஏற்றமுறும் இன்பமே".
.

- தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி.

Friday, March 13, 2015

மகரிசி வேதாத்திரி கேட்ட குருதட்சனை – உண்மை சம்பவம்

மகான்களாக சிலர் மற்றும் மக்களால் ஏற்றுக்கொள்ளப் படுகின்றார்கள். அறிவுத்திறனும், அன்பும் நிறைந்தவர்கள் கிடைப்பது சற்று கடினம் என வரலாறு சொல்லுகிறது.
நம்முடைய காலக் கட்டத்திலேயே வாழ்ந்து மரித்தவர் வேதாத்திரி. மகரிசி வாழ்க்கையில் நடந்த 100 சுவையான சம்பவங்களை படிக்க நேர்ந்தது. அதல் பகிர வேண்டும் என்று தோன்றியதை இங்கு பதிக்கிறேன்.
“ஒருநாள் ஒரு நண்பர் மகரிசி ரேஸ்க்கு போவது நல்லதா கெட்டதா?” என்றார்.
“அதனால் உங்களுக்கு லாபமா நஷ்டமா?” என எதிர்கேள்வி கேட்டார் மகரிசி.
“முதலில் லாபம் வருவதாக தோன்றுகிறது. ஆனால் கூட்டிகழித்துப் பார்த்தால்
ஏமாற்றமே மிஞ்சுகிறது இது அனுபவத்தால் அறிந்து கொண்டேன்.”
“நீங்கள் கேட்ட கேள்விக்கு உங்களிடமே விடையிருக்கிறதே!.பின் ஏன் என்னிடம் கேட்கின்றீர்கள். விட்டுவிட வேண்டியதுதானே. “
“நானும் போகக் கூடாது என நினைக்கிறேன். ஆனால் முடியவில்லை.”
“உங்கள் தந்தைக்கும் இந்த பழக்கம் இருந்ததா?”
“ஆம், சுவாமி. அவருக்கும் இந்த ரேஸ் பழக்கம் இருந்தது. பெரும்பாலான சொத்துகளை அதில் அழித்துவிட்டார்.”
“உங்கள் தந்தையாரின் எண்ணப் பதிவுகள் கருவமைப்பின் மூலமாக உங்களுக்கும் வந்திருக்கின்றன. அதனால் தவறென அறிவு உணர்த்தியும் மீண்டும், மீண்டும் அதையே செய்துவருகின்றீர்கள்
நீங்கள் நல்லவிதமாக தியானம் செய்து உங்கள் எண்ண ஆற்றலை வலுப்படுத்திக்கொள்ளுங்கள். அதற்கு நான் உதவிசெய்கிறேன்.”
இனி நான் அங்கு செல்லமாட்டேன். அது போன்ற சூழ்நிலையை ஏற்படுத்திக்கொள்ளமாட்டேன்.வாழ்க்கையில் துன்பம் சேர்ப்பது எனக்கு வேண்டாம் என்று தொடர்ந்து சங்கல்பம் செய்து வாருங்கள். எண்ண ஆற்றல் வழுப்பெற்றவுடன் இந்த தவறை விட்டுவிடுவீர்கள். என்று கூறினார்.
ஆனால் எண்ண ஆற்றல் வழுப்பெரும் வரை ரேஸ்க்கு செல்லாமல் தடுக்க வேண்டும் என எண்ணிய வேதாத்திரி “குருதட்சனையாக என்ன கொடுப்பீர்கள்?” என கேட்டார்.
“இந்த பழக்கத்தை விட உதவி புரியும் உங்களுக்கு உயிரையும் தருவேன்” என்றார் அந்த நண்பர்.
உடனே மகரிசி “அதெல்லாம் வேண்டாம். உங்கள் எண்ணங்களில் இருக்கும் ரேஸூக்கு போக வேண்டும் என்ற எண்ணத்தை மட்டும் என்னிடம் தந்துவிடுங்கள்.” என்றார்.
அவ்வாறே வாக்குக் கொடுத்த நண்பர். அதன் பிறகு ரேஸ் பக்கமே போக வில்லை.
மகான்கள் இறைவன் அனுப்பிய தூதுவர்கள். தர்மத்தினை எடுத்துரைத்து எல்லோரும் பின்பற்ற வழிவகை செய்பவர்கள். அதைதான் மகரிசியும் செய்துள்ளார்.


(நன்றி-வேதாத்திரி மகரிசி வாழ்வில் 100 சுவையான நிகழ்ச்சிகள்.)

மனவளக்கலை


தன்னை அறியாதவரை மனதிற்கு அமைதி இல்லை. ஏனெனில், இந்தப் பிறவி எடுத்ததின் நோக்கமே தன்னை அறிவதற்காக எடுக்கப்பெற்றதே. தன்னை அறிய தத்துவ விளக்கங்கள் உதவியாகத் தான் இருக்கும். ஆனால், தன் மூலத்தைத் தானே எட்டி, உள்ளுணர்வாக, அகக் காட்சியாக அறிய யோகமே துணை செய்யும். அந்த யோகத்தை இக்காலத்திற்கேற்ப எளிமைப்படுத்தப் பெற்றதே எளிய முறை குண்டலினி யோகம் எனும் மனவளக்கலை.

- அருட்தந்தை வேதாத்திரி மகரிஷி

Sunday, March 1, 2015

எளிமைப்படுத்தப்பட்ட உடற்பயிற்சி (Simplified Physical Exercises) :



எளிமைப்படுத்தப்பட்ட உடற்பயிற்சி (Simplified Physical Exercises) :
----------------------------------------------------------------------------------------
.

"உயிர் உய்ய வேண்டும். அறிவிற்கு முழுமைப்பேறு கிட்ட வேண்டும். வீடுபேறு வேண்டும். இதை ஒரு பயணமாகக் கருதினால் அப்பயணத்திற்கு உடல்தானே வாகனம். இந்த வாகனத்தைப் பேணிப் பாதுகாத்தால்தான் இந்த ஆன்மீகப் பயணத்தை வெற்றியோடு முடிக்க முடியும். உடற்பயற்சி, தவம் இவை இரண்டும் பாவப் பதிவுகளை எல்லாம் போக்க வல்லவை.
.


உயிர் தான் உடலை நடத்துகிறது. காக்கிறது. உடலில் ஏற்படுகின்ற குழப்பத்தைச் சரிசெய்ய, மருந்து முதலியவை உயிருக்குக் கொடுக்கப்படுகின்ற ஊக்கமும் உதிவியுமே. யோக முறையாகிய நமது "மனவளக்கலை" பயிற்சியால் உயிராற்றல் சேமிப்பு அதிகமாவதால் நோய் எதிர்ப்பாற்றலும், நோய் நீக்குகின்ற ஆற்றலும் நமக்கு எளிதாகக் கிட்டுகிறதென்பதையும் இங்கே சொல்லியாக வேண்டும்.
.

உடலுக்கும் உயிரும் இணைந்த அந்தக் கூட்டுறவிலேயே இந்த வாழ்க்கையானது அமைந்துள்ளது. உடலுக்கும் உயிருக்கும் எப்போது பிணக்கு ஏற்பட்டாலும் அந்தப் பிணக்குதான் நோய். உடலுக்கும் உயிருக்கும் நட்பு நீடித்தால் வாழ்க்கை என்கிறோம். உடலுக்கும் உயிருக்கும் பிரிவு ஏற்பட்டால் மரணம் என்கிறோம்.
.

உயிருக்கும் உடலுக்கும் ஒத்த உறவு இனிமையான உறவு இருக்கின்ற வரையில்தான் உடல் நலமும், மனநலமும் பாதுகாக்கப் பெறும். இந்த உறவானது நீடித்திருப்பதற்கு இரத்த ஓட்டம், வெப்ப ஓட்டம், காற்று ஓட்டம் இவை மூன்றும் சரியாக இருக்க வேண்டும். அளவிலே, முறையிலே இவை சரியாக இருந்தால் தான் உயிருக்கும், உடலுக்கும் ஒரு தொடரியாக்கம் (நட்பு, உறவு) சீராக இருக்கும்.
.

ஆசனங்கள், உடற்பயிற்சிகள் எல்லாவற்றையும் நான் பழகி ஆராய்ந்து இந்திய வைத்திய சாஸ்திரங்களில் கிடைத்த அறிவையும் பயன்படுத்தி ஒரு முழுமையான உடற்பயிற்சித் தொகுதியை வகுத்துள்ளேன். அவைகள்

1) கைப்பயிற்சி (Hand Exercise)
2) கால் பயிற்சி (Foot Reflexology)
3) மூச்சுப் பயிற்சி (Neuro Muscular Breathing Exercise)
4) கண்பயிற்சி (Eye Exercise)
5) மகராசனம் (Maharasanam)
6) உடல் வருடல் (Massage)
7) ஓய்வு தரும் பயிற்சி (Acu Pressure & Relaxation) என்பனவாகும்.
.

அறிவின் முழுமைப்பேறு அடைய நாம் பிறவி எடுத்துள்ளோம். அதற்கு அறிவு சுதந்திரமாக இயங்க வேண்டும். உடலின்றி அறிவிற்கு இயக்கமில்லை. ஆகவே அறிவு சரிவர இயங்கவும் உடலை நோய் நொடியின்றி, வேறு எக்குறையும் இன்றிப் பாதுகாத்துக் கொள்ள வேண்டியது தலையாய கடமை. எப்போதும் சமநிலை உணர்வோடு பழகி, உடல் நலம் கெடாதபடி விழிப்போடு செயலாற்றி நலமடைவோமாக.
.

"உள்ளம் பெருங்கோயில் ஊனுடம்பு ஆலயம்
வள்ளல் பிரானார்க்கு வாய் கோபுர வாசல்
தெள்ளத் தெளிந்தார்க்குச் சீவன் சிவலிங்கம்
கள்ளப் புலனைந்தும் காளா மணிவிளக்கே என்றும்,
.

உடம்பார் அழியின் உயிரார் அழிவர்
திடம்பட மெய்ஞ்ஞானம் தேரவும் மாட்டார்
உடம்பை வளர்க்கும் உபாயம் அறிந்தே
உடம்பை வளர்த்தேன் உயிர் வளர்த்தேனே என்றும்,
.

உடம்பினை முன்னம் இழுக்கென் றிருந்தேன்
உடம்பினுக் குள்ளே உறுபொருள் கண்டேன்
உடம்புள்ளே உத்தமன் கோயில் கொண்டா னென்று
உடம்பினை யானிருந்து ஓம்புகின் றேனே" என்றும்
.

திருமூலர் கூறியுள்ளார். எனவே இந்த உடலை ஆரோக்கியத்தோடு வைத்துக்கொள்ளவும், அதற்காக நாம் முயற்சிகள் மேற்கொள்ளவும் வேண்டும்."
.

வாழ்க வையகம் வாழ்க வளமுடன்.

- தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி.

"சுவாமிஜி, மரணத்தருவாயில் எண்ணம் எப்படி இருக்கும்?"



கேள்வி :-


"சுவாமிஜி, மரணத்தருவாயில் எண்ணம் எப்படி இருக்கும்?"

.


மகரிசியின் பதில்: -


" கடைசி எண்ணமானது உயிர் விடும் மனிதனின் குணத்தைப் பொருத்தது. ஆன்மீகப் பயிற்சியிலேயே சிந்தனை செய்து கொண்டிருந்தவர் மரணமுறும் போது தெய்வீக எண்ணங்களாகத் தோன்றும். சிற்றின்பப் பிரியர்களுக்குக் கடைசி நேரத்திலும் சிற்றின்பம் பற்றிய எண்ணமே தோன்றும். கடைசி எண்ணம் என்பது ஏதோ கடைசி கடைசியாகத் திடுக்கென்று வந்துவிடுவதில்லை. வாழ்நாளெல்லாம் எந்தத் தன்மையை ஒருவர் உருவாக்கிக் கொண்டாரோ அதற்கு நிகரான எண்ணமேதான் கடைசியிலும் தோன்றும்.

.


இறைநிலையடைய வேண்டும் என்று ஆசைப்படுபவர், வாழ்நாளெல்லாம் அதே முயற்சி பயிற்சியில் இருந்தால்தான் கடைசி எண்ணமும் அதே போன்று ஏற்பட்டு, அவரது வாழ்நாளின்பின் அவருக்கு இறைநிலை சித்திக்கும்.

.


அப்படியின்றி தவறான முறையில் வாழும் ஒருவருக்குக் கடைசி கடைசியாகவும் கீழான எண்ணமே தோன்றி, அவரது ஆன்மாவானது அத்தகு தன்மை கொண்ட வாழ்வோரைப் பற்றிக் கொண்டு தன் எண்ணத்தையும் ஆசையையும் அவர் மூலம் பூர்த்தி செய்து கொள்ளும்.

.


வாழ்க வையகம் வாழ்க வளமுடன்.


- தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி.


.

********************************************************************

.


"வேதத்தின் உட்பொருளையறிய வென்றால்

விவாதத்தால் முடியாது, அறிவை ஒன்றிப்

பேதமாய்க் காணும் கற்பனைத் தோற்றங்கள்

பிறக்குமிடம் கண்டு நிற்க; வேதம் என்ற

போதனைகளில் பொதிந்த கருத்துயர்வும்

பூவுலக மாந்தர்களைப் பண்படுத்தி

நாதத்தின் மூலமென்ற மௌனம் காட்டி

நான் யார் என்றறிய வைக்கும் மார்க்கமாகும் !."

.


உயர் அறிவு:


"புலனைந்தின் துணைகொண்டு பூவுலகை அனுபவித்து

புலன் தொடர்பற்று ஆராயும் புதுமையே ஆறாம் அறிவாம் ;

புலன் கடந்த செயல் முடிவே பூர்வ நிலை அறிவறிதல்

புலன் கடந்த அவ்விடத்தே பொருத்தி வாழ்வான் ஞானி."

.


உயிர் விளக்கம் :-


" உடல் உயிர் இரண்டிற்கும் வித்தே மூலம்

உட்பொருளே மெய்ப்பொருளாம் உண்மை தேர்வீர்

உடல் என்ப தணுக்கள் பலசேர்ந்த கூட்டு

உயிர் என்பதோ அணுவின் நுண்துகள் ஆம் ;

உடல் ஊடே உயிர் சுற்றிச் சுழன்றியங்க

உணர்ச்சி யென்ற விளைவுண்டாம் அறிவு ஈதே

உடலை விட்டு உயிர் பிரிந்தால் அறிவங்கேது

உடல் வாழ்விற்குள் தான் இன்பம் துன்பம்."

.


வாழ்க வையகம் வாழ்க வளமுடன்.


- தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி.

Saturday, October 11, 2014

ஆராய்ச்சி, முயற்சி, வெற்றி :



ஆராய்ச்சி, முயற்சி, வெற்றி :

கவலை என்பது மனித சக்தியைக் குன்றச் செய்யும் அறிவின் திசை மாற்றமேயாகும். ஒரு நிமிடம் கூட கவலை என்ற பாதைக்கு எண்ண வேகத்தை விட வேண்டாம். துணிவும் விழிப்பும் கொண்டு முயற்சியாக மாற்றிக் கொள்வதே சிந்தனையாளர்களின் கடமை. கவலை என்பது உடல், அறிவு, குடும்பம், ஊர் உலகம் என்ற துறைகள் அனைத்திற்கும் மனிதனுக்கு நஷ்டமே தரும். முயற்சி எவ்வகையிலேயும் லாபமே தரும்.

இயற்கை வளம் என்ற இன்பப் பேரூற்று மக்களின் அறியாமை என்ற அடுக்குப் பாறைகளால் பலதுறைகளில் மறைக்கப்பட்டுள்ளது. அறிவின் விளக்கமான துணிவு என்ற திருகுயந்திரம் கொண்டு வேண்டிய அளவில் அவ்வின்பத்தை அனுபவிக்கலாம். தேவையுணர்வு, சந்தர்ப்பம் என்பனவற்றால் செயல்களும், செயல்களால் உடலுக்கும், அறிவிற்கும் ஒருவிதமான பழக்கமும் ஏற்பட்டு அப்பழக்கத்திலிருந்து விடுபட முடியாமல் எண்ணமும் உடலியக்கமும் நடைபெற்று வருதல் மனிதருக்கு இயல்பு என்றாலும், சிந்தனை, துணிவு, விடாமுயற்சி என்பனவற்றின் மூலம் பழக்கத்தை மாற்றி வாழ்வில் மறுமலர்ச்சி ஏற்படுத்திக் கொள்ள முடியும்.

ஆராய்ச்சி ! முயற்சி !! வெற்றி !!! என்ற மந்திரத்தை தினந்தோறும் பல தடவை, நேரம் கிடைக்கும் போதெல்லாம் சில நாட்களுக்குச் செபித்துக் கொண்டே வர கவலை என்ற வியாதியும் ஒழியும். வாழ்வில் ஒரு புதிய தெளிவான பாதை திறக்கப்படும்.

வாழ்க வையகம் வாழ்க வளமுடன்.

- தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி.

"ஆக்கத்துறையில் அறிவைச் செலுத்து
ஊக்கமுடன் உழை, உயர்வு நிச்சயம்".
.

"கவலை யென்பதுள்ளத்தின் கொடிய நோயாம்
கணக்குத் தவறாய் எண்ணம் ஆற்றலாம்,
கவலை யென்பதோ வாழ்வில் சிக்கல் கண்டு
கலங்கி மனம் திகைப்படையும் நிலைமையாகும்;
கவலை உடல்நலம் உள்ள நலன் கெடுக்கும்
கண் முதலாய்ப் பொறி ஐந்தின் வளம் கெடுக்கும்,
கவலையினை முயற்சி சிந்தனை இவற்றால்
கடமையினைத் தேர்ந்தாற்றி வெற்றி கொள்வோம்".

.
- தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி.