Friday, July 11, 2014

முத்திரை..!



முத்திரை..!


முயற்சித்து பாருங்கள் நிச்சயம் மாற்றம் தெரியும்....


1.சின் முத்திரை அல்லது ஞான முத்திரை: கட்டை விரல் மற்றும் ஆள்காட்டி விரல் நுனிகள் இரண்டும் தொட்டுக்கொண்டு இருக்க வேண்டும். மற்ற விரல்கள் நேராக இருக்க வேண்டும். இதை செய்வது மனத்தை ஒருநிலைப்படுத்த உதவும். மூளை செல்கள் புத்துணர்ச்சி பெறும். தலைவலி, தூக்கமின்மை, கவலை, கோபம் ஆகியவை விலகும்.


2.வாயு முத்திரை: ஆள்காட்டி விரலைக் கட்டை விரலின் அடிப்பகுதியில் வைத்து கட்டை விரலால் சிறிது அழுத்தம் கொடுக்க வேண்டும். மற்ற விரல்கள் நேராக இருக்க வேண்டும். இதை செய்தால் வாயு தொடர்பான நோய்கள் போகும். ரத்த ஓட்டம் சீராகும்.


3.சூன்ய முத்திரை: நடுவிரலை, கட்டை விரலின் அடிப்பகுதியில் வைத்து கட்டை விரலால் அழுத்த வேண்டும். மற்ற விரல்கள் நேராக இருக்க வேண்டும். இதனால் காதில் நீர் வடிதல், காது வலி, காது அடைப்பு போன்றவை சீராகும். எலும்பு தளர்ச்சி மற்றும் இதய நோய் தவிர்க்கப்படும். தசைகள் வலுவடையும். தைராய்டு நோயிலிருந்து நிவாரணம் கிடைக்கும்.


4.பிருதிவி முத்திரை: பெருவிரல் மற்றும் மோதிர விரலின் நுனிப்பாகம் தொட்டுக் கொண்டிருக்க வேண்டும். மற்ற விரல்கள் நேராக இருக்க வேண்டும். இதை தொடர்ந்து செய்து வந்தால் உடல் மற்றும் மூளை செல்கள் ஊக்கம் பெறும்.


5.சூரிய முத்திரை: மோதிர விரலை கட்டை விரலின் அடிப்பாகத்தில் வைத்து மெதுவாக அழுத்த வேண்டும். மற்ற விரல்கள் நேராக இருக்க வேண்டும். வயிறு சம்பந்தப்பட்ட பிரச்னைகள் நீங்கும். உடலின் வெப்பம் அதிகரித்து ஜீரண சக்தி பெருகும்.


6.வருண முத்திரை: சுண்டு விரலின் நுனியை கட்டை விரலின் நுனி தொட்டு கொண்டிருக்க வேண்டும். மற்ற விரல்கள் நேராக இருக்க வேண்டும். இதனால், தோல் சம்பந்தமான நோய்கள் குணமாகும். தோல் வறட்சி, முகப்பருக்கள் வராமல் தடுக்கப்படும்.


7.பிராண முத்திரை: மோதிர விரல், சுண்டு விரல் இரண்டையும் மடக்கி, கட்டை விரலின் நுனியை தொட்டு கொண்டு இருக்க வேண்டும். மற்ற விரல்கள் நேராக இருக்க வேண்டும். இந்த முத்திரையால் கண் கோளாறுகள் நீங்கி ஒளி பெறும். நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.


8.அபான முத்திரை: மோதிர விரல், நடுவிரல் இரண்டையும் மடக்கி கட்டை விரலின் நுனியை தொட்டு கொண்டிருக்கும்படி வைக்க வேண்டும். மற்ற விரல்கள் நேராக இருக்க வேண்டும். இதை தொடர்ந்து செய்தால் மலச்சிக்கல், மூல நோய், வாயுத் தொல்லை விலகும். உடலிலிருந்து தேவையற்ற கழிவுகள் வெளியேறும்.


.9அபான வாயு முத்திரை: மோதிர விரல், நடுவிரல் இரண்டும் கட்டை விரல் நுனியை தொட்டு கொண்டிருக்க வேண்டும். ஆள்காட்டி விரல் கட்டை விரலின் அடிப்பாகத்தை தொட்டு கொண்டிருக்க வேண்டும். இவ்வாறு செய்தால் இதய நோய் சரியாகும். ரத்த ஓட்டம் சீரடையும்.


10.லிங்க முத்திரை: இரண்டு கைகளையும் சேர்த்து பிடித்துக்கொண்டு இடது கட்டை விரலை மட்டும் நிமிர்த்தி வைத்துக் கொள்ள வேண்டும். உடலில் உள்ள அதிக சூட்டை சமன்படுத்தும். கபத்தை அகற்றும். ஜலதோஷம், ஆஸ்துமா பிரச்னைகள் விலகும். வறட்டு இருமல், நீர்க்கட்டு பிரச்னை சரியாகும்.


11.அஸ்வின் முத்திரை: பத்மாசனம் அல்லது வஜ்ராசனத்தில் அல்லது சுகாசனத்தில் அமர்ந்து கொண்டு குதத்தை சுருக்கி விரிவடையச் செய்வதே அஸ்வினி முத்திரையாகும். இதை படுத்து கொண்டும் செய்யலாம். ஆரம்ப காலத்தில் 10 முதல் 20 முறையும், பிறகு 30 முதல் 50 முறையும் செய்யலாம்.


இந்த முத்திரையை செய்தால் நரம்பு மண்டலம் ஊக்குவிக்கப்படும். வாயுத் தொல்லை, மலச்சிக்கல், மூலநோய் ஆகியவை நீங்க வாய்ப்பு உள்ளது. பெண்களுக்கு கருப்பை வலுப்பெறும். பிரசவ காலத்தில் இயல்பான குழந்தைப் பேறு கிடைக்கும்.

Tuesday, July 8, 2014

கருமையம் தூய்மையாக இருக்கட்டும்:


வாழ்க வையகம் வாழ்க வளமுடன்

கருமையம் தூய்மையாக இருக்கட்டும்:

உடலுக்கு மூலப் பொருள் வித்து
உயிருக்கு முக்கியப் பொருள் விண்துகள்கள்
மனதுக்கு மூலப் பொருள் சீவகாந்தம்.

இவை மூன்றும் மையம் கொண்டிருப்பது உடலுக்கு மையமான பகுதியாகிய மூலாதாரம். மூலாதாரம் என்பது மனித உடலுக்கு கருமையம்.

கருமையம் தான் மனிதனின் பெருநிதி; செயலுக்கேற்ற விளைவைத் தரும் தெய்வீக நீதிமன்றம். பிறப்பிற்கும் இறப்பிற்கும், தொடர் பிறப்புகள் பலவற்றுக்கும் இடையே வினைப்பதிவு பெட்டகமாக தொடர்ந்து வரும் மாயத்துணைவன்; தெய்வத்தையும், மனிதனையும் இணைத்துக் காட்டும் அறிவின் பேரின்பக்களம்.

இத்தகைய பெருமை வாய்ந்த கருமையத்தைத் தூய்மையாக வைத்துக் கொள்வதற்கான வழிமுறைகள்.

1) பெற்றவர்கள், குரு, ஆட்சித்தலைவர், தெய்வம் இவர்களை மதித்து வாழ்தல்.

2) ஒழுக்கம் கடமை ஈகை மூன்றும் இணைந்த அறநெறியை பின்பற்றுதல்.

3) அகத்தவப் பயிற்சியை முறையாகச் செய்து வருதல்.

4) இரத்தம், காற்று, உயிர், சீவகாந்தம் இவை தடையின்றி ஓடி உடலைக் காத்துக் கொள்ள ஏற்ற உடற்பயிற்சிகளை அளவோடு செய்து வருதல்.

5) பெற்றோர்கள், வாழ்க்கைத் துணைவர், பெற்ற குழந்தைகள் இவர்களை பொறுப்போடும் அக்கரையோடும் காத்து உதவி வருதல்.

6) இறைநிலை உணர்ந்து அந்நிலையோடு அடிக்கடி ஒன்றி பழகுதல்.

7) மனித முயற்சியால் உற்பத்தி செய்த பொருட்களையும் இயற்கை வளத்தையும், பிறர் உபயோகிக்கும் பொருட்களையும் சேதப்படுத்தாது மதித்து நடத்தல்.

8) நாம் பார்க்கும் ஒவ்வொரு உடலும் இயற்கை என்ற பேராற்றலால் கட்டப்பட்டிருக்கும் பெருமையை உணர்ந்து உடலுக்குள் அறிவாக விளங்குவது தெய்வத்தின் ஒளியே என்று மதித்து ஒத்தும் உதவியும் வாழ்ந்து வருதல்.

9) உள்ளத்தில் பகை வஞ்சம் எதையும் வைத்துக் கொள்ளாமல் மன்னிப்பும், கருணையும் கொண்டு எல்லோருடனும் இன்முகத்தோடும் அன்போடும் பழகுதல்.

10) தேசம், மதம், சாதி, இனம், மொழி இவற்றால் மனிதரை வேறுபடுத்திக் காணாமல் எல்லோரும் இயற்கையின் மக்கள் என்ற நினைவில் வாழ்தல்.
- தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி.
வாழ்க வையகம் வாழ்க வளமுடன்

Friday, July 4, 2014

வேதாத்திரியம் : வேண்டியதெல்லாம் கிடைக்கும்



நீ எதிர்பார்த்தது, எதிர்பார்த்தபடி பிறர் மூலமாகக் கிடைக்காது. ஒவ்வொரு மாற்றத்திலும் பிணக்குற்று, பிணக்குற்று ஏமாற்றத்திற்கு ஆட்பட்டு அதனாலே துன்பமானது பெருகிக் கொண்டே போகிறது. இந்த அடிப்படையைத் தெரிந்து கொண்ட பின்னர் "எதிர்பார்த்தல்" என்பதை விட்டு விடுவது நல்லது எனத் தெரிகிறதல்லவா? தொடக்கத்தில் ஒரு வார காலம் யாரிடமிருந்தும் எதையும் எதிர்பார்ப்பதில்லை என்ற முடிவினை எடுத்துக் கொள்ளுங்கள். பின்னர் அதை ஒரு மாத காலத்திற்கு நீட்டித்துக் கொள்ளுங்கள். (Do not expect anything from anyone for one week to start with and then extend the period to one month).


அதற்குரிய விளைவு நிச்சயமாக உண்டு. நீ எதிர்பார்த்தாலும், எதிர் பார்க்காவிட்டாலும் நீ என்ன செயல் செய்கிறாயோ, அந்தச் செயலுக்குத் தக்க விளைவு வந்துதான் ஆக வேண்டும். நல்லதை எண்ணி, நல்லதை விளங்கிக் கொண்டு, பயனை உணர்ந்து கொண்டு இப்பொழுது செய்கிறேன்; வருவதை ஏற்றுக் கொள்ளச் சித்தமாயிருக்கிறேன் - இந்த அளவு வரும் எனக்கூட எதிர்பாராது நல்லதைச் செய்யும்போது நிச்சயமாக நன்மை பிறக்கும் என்று செய். அவ்வாறு செய்வதற்கு முன்னதாக இன்னொரு ஆராய்ச்சியும் தேவை. அதாவது உன்னைப் பற்றித் தெரிந்து கொள்ள வேண்டும்.


நீ எங்கே இருக்கிறாய், என்னவாய் இருக்கிறாய்? (What you are, where you are and how you are?) உடல் நலத்திலே, வலுவிலே, வயதிலே, அறிவாற்றலிலே அல்லது விஞ்ஞான வளர்ச்சியிலே, பொருள் உற்பத்தி செய்யும் திறமையிலே, அதிகாரத்திலே, சூழ்நிலையிலே உள்ள ஒரு வாய்ப்பிலே நீ எங்கே இருக்கிறாய், எப்படி இருக்கிறாய்? இந்த நிலையில் இருந்து கொண்டு உனக்கு, குடும்பத்திற்கு, சுற்றத்தாருக்கு, ஊருக்கு, உலகுக்கு எந்த அளவிலே நான் நன்மை செய்ய வல்லவன். செய்ய முடியும் என்று கணித்துக் கொள். அதைச் செய்ய எப்பொழுதும் தயாராக இரு; செய்து கொண்டே இரு; வாய்ப்புக் கிடைக்கும்போதெல்லாம் அளவு மீறிப் போகாமல் இந்த வழியிலே ஒரே ஒரு வாரம் பயிற்சி செய். இன்னும் சரியாக ஊறி வரவில்லை என்றால் இன்னும் ஒரு மாத காலத்திற்கு அந்தப் பயிற்சியை நீடித்து வா அப்போது பார்க்கலாம் - உனக்கு என்ன வேண்டுமோ அவ்வளவும் கிடைக்கும், அதற்கு மேலேயும் கிடைக்கும்.

Monday, May 19, 2014

Simplified Kundalini Yoga (Sky Yoga)


Simplified Kundalini Yoga (Sky Yoga) :

"மனித மனம் பேராற்றல் பெற்ற ஒன்று. மனம் உள் ஒடுங்கவும், பரந்து விரிந்து செல்லவும் உள்ள ஆற்றலைப் பெற்றது. மனதின் புலன் இயக்க வேகத்தைஎல்லாம் கழித்துப் பரமாணு நிலைக்கு ஒன்று படுத்தும்போது இயற்கையின் இரகசியங்களைப் பேரியக்க மணடலத்தில் நிகழும் பல தரப்பட்ட இயக்க வேகங்களை அறிந்து உணர்கிறது. எல்லைக்கு உட்படாத 'மனம்' ஒன்றில்தான் எல்லையற்ற சுத்தவெளியை பரம்பொருளை, பரவெளியை உணர முடியும். அந்த நிலையைப் பெறுவதற்கு உறுதுணையாகவும், வழிகாட்டியாகவும் உள்ளதே 'அகத்தவம்' (Meditation) எனும் "குண்டலினி யோகமாகும்".

அகத்தவப் பயிற்சினால் தான் அலையும் மனதினை நிலைக்குக் கொண்டுவர இயலும். அலையும் மனதை ஓரிடத்தில் நிலைத்து நின்று நோக்கவில்லையானால், ரங்க ராட்டினத்தில் சுற்றிக் கொண்டிருப்பவன் கண்களுக்குப் பக்கத்தில் உள்ளவர்கள், பக்கத்தில் உள்ள வீடுகள் ஆகியவை படாமல் தப்பிப் போவது போல உலகின் உண்மை நிலைமைகளை மனதால் உணர முடியாது. எனவே மனதினுடைய இயக்க வேகத்தைக் குறைத்துக் குறைத்து இறுதியில் நிலைத்து நின்று நோக்கி அறிதல் வேண்டும். இந்த நோக்கத்தை அருளவல்ல ஒரு உன்னத உளப்பயிற்சியே "குண்டலினியோகமாகும்" (Sky Yoga).

வாழ்க வையகம் வாழ்க வளமுடன்.

- தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி.

Tuesday, May 13, 2014

ஆளுமைத் திறன்

ஆளுமைத் திறன்

இயற்கை வளங்களை வாழ்வின் வளமாக உருமாற்றியும் அழகு படுத்தியும் வாழ்ந்து வரும் மனித இனம் மற்றவர்களோடு பிணக்கின்றி வாழ வேண்டியது மிக அவசியமாகின்றது. இந்த நெறியே அறம் எனப் படுகிறது. இந்தப் பெருநோக்கத்தில் வாழ மனதையும் செயல்களையும் சிந்தனையின் உயர்வுக்கேற்ப மாற்றியமைத்துக் கொள்ள வேண்டும். பல ஆயிரம் தலைமுறைகளாக ஆற்றிய எண்ணம், செயல் பதிவுகளால் வடிவம், தரம், திறம் அமையப்பெற்ற மனிதன் தனது ஆளுமை வளத்தைச் சிறப்பித்துக் கொள்ள வேண்டுமெனில், அதற்குஏற்ற உளப் பயிற்சியம் செயல்பயிற்சியும் வேண்டும். புலன்கள் மூலம் உணர்ச்சி நிலையில் வாழும் மனிதனுடைய மன அலைச்சுழல் வினாடிக்கு 14 முதல் 40 வரையில் (Beta Wave) இயங்கிக் கொண்டிருக்கிறது. சிந்தனையாற்றல் பெருக வேண்டுமெனில், மனம் வினாடிக்கு 14 சுழலுக்குக் குறைவான அலை இயக்கத்திற்குக் கொண்டு வர வேண்டும்.
மனித அமைப்பில் பரு உடல் (Physical Body), நுண்ணுடல் (Astral Body), பிரணவ உடல் அல்லது சீவகாந்த உடல் (Causal Booy) ஆகிய மூன்றும் ஒன்றுக்குள் ஒன்றாக இணைந்து செயல்புரிகின்றன. சூக்கும உடலாகிய உயிர்த்துகள் (Life Force) மனம் வைத்து அகநோக்குப் பயிற்சியினைப் பழக வேண்டும். இந்தப் பயிற்சியில் அனுபவம் பெற்றவர் மூலமே இதை உணர்ந்து பழகும் பயிற்சியே அகநோக்குப் பயிற்சி எனப் படுகிறது. இப்பயிற்சியால் மன அலைச்சுழல் படிப்படியாகக் குறைந்து வினாடிக்கு 1லிருந்து 3 வரையில் வருமேயானால் மனம் அமைதி நிலைக்கு வரும். இந்த மனநிலையில் மனம், உயிர், இறைநிலை என்ற மூன்று மறைபொருட்களையும் உணரும் திறமை மனித மனதுக்குக் கிடைக்கும். தேவையில்லாத, துன்பமே தரும் பதிவுகளை மாற்றி ஆளுமை வளத்தைச் சிறப்பித்துக் கொள்ளவும், இந்தப் பயிற்சியோடு அகத்தாய்வுப் பயிற்சி களையும் பயின்று செய்தால் மனிதனுள் அடங்கி இருக்கும் ஆற்றல்கள் முழுவதையும் வெளிப்படுத்திப் பயன் கண்டு தானும் சிறப்பாக வாழ்வ தோடு, குடும்பம், சுற்றம், ஊர், உலகம் என்ற அளவில் தன் கடமைகளைச் செய்து நிறைவு பெறலாம். அமைதியும் இன்பமும் பெறலாம்.
அருள் தந்தை