Thursday, August 15, 2013

இறைவணக்கம், குருவணக்கம்

வாழ்க வையகம்                                                            வாழ்க வளமுடன்

இறைவணக்கம்

ஆதியெனும் பரம்பொருள்மெய் எழுச்சி பெற்று
அணுவென்ற உயிராகி அணுக்கள் கூடி
மோதியிணைந் தியங்குகின்ற நிலைமைக்கேற்ப
மூலகங்கள் பலவாகி அவையி ணைந்து
பேதித்த அண்டகோடிகளாய் மற்றும்
பிறப்பு இறப்பிடைஉணர்த லியக்கமாகி
நீதிநெறி உணர்மாந்தராகி வாழும்
நிலையுணர்ந்து தொண்டாற்றி இன்பம் காண்போம்.
 

குருவணக்கம்

சிந்தையை யடக்கியே சும்மா விருக்கின்ற
சீரறிய செய்த குருவே!
அந்தநிலை தனிலறிவு அசைவற்றிருக்கப் பெரும்
ஆனந்தம் பொங்குதங்கே!
இந்தபெரும் உலகமிசை எடுத்த பல பிறவிகளின்
இறுதிப் பயனாகிய
சந்ததமும் எனைமறவாத சாந்தவாழ்வளித்தோய் என்
சந்தோஷ செய்தி இதுவே.

Sunday, August 11, 2013

கணவன் மனைவி உறவு

குடும்பம் இல்லாமல் மனிதனுடைய வாழ்க்கையில் அமைதியோ, வெற்றியோ இல்லை. வேறு எந்த விதத்தில் வெற்றியோ, மகிழ்ச்சியொ வந்தாலும் குடும்பமின்றி அதை அனுபவிக்க முடியாது. அவற்றை அனுபவிப்பது, பாதுகாப்பது எல்லாம் குடும்பத்தில் தான் இருக்கிறது.

இல்லறத்தில் கணவன்-மனைவி உறவு மிகமிக மதிப்புடையது. அது சாதாரணமாக ஏதோ ஒருவருக்கொருவர் ஒத்துக்கொண்டு வாழ்வது அல்ல.

நீண்டகாலத் தொடராக வந்த வினைப்பயனாக-அதாவது நல்வினையானாலும், தீவினையானாலும் அவை தொடர்பாக காலம் முழுவதும் அனுபவித்துத் தீர்ப்பதற்கான தொடர்பு ஆகும். இந்தத் தொடர்பை நல்வினைத் தொடராகவே மாற்றிக் கொள்ளலாம். ஏதேனும் குற்றம் அல்லது குறை இருந்தாலும் கூட ஒருவருக்கொருவர் உணர்ந்து, ஒத்துப் போகக்கூடிய அளவில் மாற்றிக் கொள்ளலாம். அதற்குச் சகிப்புத்தன்மை, விட்டுக்கொடுத்தல், தியாகம் ஆகிய மூன்று தன்மைகள் வேண்டும்.

காலையில் எட்டு மணிக்கு அலுவலகம் செல்ல வேண்டும். இன்னும் உணவு தயாராகவில்லை. உணவு வேண்டும் என்று எதிர்பார்ப்பீர்கள், நேரம் கடந்து கொண்டிருக்கும், கொஞ்சம் சகித்துக் கொண்டால் போதும். இங்கே உணவ ஆகவில்லை. எட்டு மணிக்கு அலுவலகம் போக வேண்டும். அலுவலகத்தில் உள்ள கடையில் சாப்பிட்டுக் கொள்கிறேன் என்று சொல்லிவிட்டுப் போகலாம். இவ்வாறு விட்டுக் கொடுப்பதில் தவறு ஒன்றுமில்லை.